ஈரான் மீது தாக்குதலுக்கு ஒப்புதலளித்த ட்ரம்ப்... பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், ஆனால் அந்நாட்டைத் தாக்குவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல் கசிந்துள்ளது.
ஃபோர்டோ மீது தாக்குதல்
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டால், அமெரிக்க ஜனாதிபதி தாக்குதல்களைத் தொடங்குவதை நிறுத்தி வைப்பார் என்று மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
நிபந்தனையற்ற சரணடைதலுக்கான ட்ரம்பின் கோரிக்கையை ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி நிராகரித்ததை அடுத்து தமது பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், வழக்கம் போல தாக்குதல் நடத்தலாம் அல்லது நடத்தாமல் இருக்கலாம் என குழப்பியுள்ளார்.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க இராணுவத்தின் எந்த வகையான தலையீடும் மிகப்பெரிய விலையை அளிக்க வேண்டியிருக்கும் என காமெனி எச்சரித்துள்ளார். மேலும் ஈரான் தேசம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களை அகற்ற
இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், தாம் என்ன செய்யப் போகிறேன் என்பது எவருக்கும் தெரியாது என்றார். இஸ்ரேல் இராணுவம் ஈரான் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது, ஏவுகணை தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியுள்ளது. பதிலுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேலின் பாதிப்புகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில்,
ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கி அவரது நாட்டின் படைகள் படிப்படியாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதலை முன்னெடுக்க ட்ரம்ப் முடிவெடுப்பார் என்றால், மத்திய கிழக்கு இன்னொரு முறை பற்றியெரியப் போகிறது என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |