ஈரான் போருக்கான மொத்த செலவையும் அரபு நாடுகளிடம் வசூலிக்க ட்ரம்ப் திட்டம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கான மொத்த செலவையும் ஏற்குமாறு அரபு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் கேட்டுக் கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் மிகுந்த ஆர்வம்
அது பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் செய்தித்தொடர்பாளரான கரோலின் லீவிட்டிடம், போருக்கான செலவை அரபு நாடுகள் ஏற்க வேண்டுமா என்று திங்களன்று கேட்கப்பட்டது.

1990-ல் நடந்த வளைகுடாப் போரின்போது அமெரிக்காவின் தலையீட்டிற்கு அதன் நட்பு நாடுகள் நிதியுதவி அளித்ததைக் குறிப்பிட்டு இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள லீவிட், அரபு நாடுகளிடம் இருந்து மொத்த செலவையும் வசூலிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று நான் நினைக்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவருக்கு இப்படியான ஒரு திட்டம் உள்ளது என்றும், அது தொடர்பில் விரிவாக பதிலளிக்க தாம் விரும்பவில்லை என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் விரிவான விளக்கமளிப்பார் என்றும் லீவிட் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரின் போது, குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பை முறியடிப்பதற்காக, அந்நாடு மற்றும் அதன் பல அரபு அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்கா பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய கூட்டணியை வழிநடத்தியது.

இழப்பீடு வேண்டும்
இதன் ஒருபகுதியாக, அப்பகுதியில் உள்ள நாடுகளும், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கூட்டணி நாடுகளும், அமெரிக்காவின் பங்களிப்பிற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் வகையில் 54 பில்லியன் டொலர்களை (இன்றைய மதிப்பில் 134 பில்லியன் டொலர்களுக்குச் சமம்) திரட்டின.
ஆனால் தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் நட்பு நாடுகளையும் பிராந்திய நாடுகளையும் கலந்தாலோசிக்காமல் அல்லது ஈடுபடுத்தாமல், ஈரானுடன் ஒருதலைப்பட்சமாகப் போரைத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை ஈரான் தனது நிபந்தனைகளில் ஒன்றாக விதித்துள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
போரால் ஏற்பட்டுவரும் இழப்புகள் ஒரு பக்கம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் என ஈரான் மீதான போரால் உலக நாடுகளும் திணறி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |