தீவிரமடையும் உக்ரைன் போர்... Board of Peace-ல் சேர புடினுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதி வாரியத்தில் சேர ரஷ்யாவின் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அழுத்தம்
உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதுடன், காஸாவில் நிர்வாகம் மற்றும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது ட்ரம்பின் இந்த அமைதி வாரியம்.
திங்கட்கிழமை வெளியான இந்த அழைப்பு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏறக்குறைய நான்கு வருடப் போர் தொடரும் நிலையிலும், அங்கு ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாமல் இருக்கும் சூழ்நிலையிலும் விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், தான் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் போரை நிறுத்திவிடுவேன் என்று ஒரு வருடத்திற்கு முன்பு ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஒரு பக்கம் போர் தீவிரமடைந்து வர, மறுபக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன, ஆனால் அதன் வேகம் மீண்டும் குறைந்துவிட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் தாமே தலைமை வகிக்கும் இந்த காஸா அமைதி வாரியத்தில் இடம்பெறுவதற்காக, வெள்ளை மாளிகை உலகம் முழுவதிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களைத் தொடர்புகொண்டுள்ளது.
இந்தியாவின் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், உடனடியான பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த அழைப்பை நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அமைதிக்கான இந்த வாரியத்தில் சேருவதற்கு ஜனாதிபதி புடினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது... ட்ரம்ப் விடுத்த மிரட்டல்
புடின் இதில் சேர விருப்பம் கொண்டுள்ளாரா என்பது குறித்துக் குறிப்பிடாமல், அந்த வாரியத்தின் அனைத்து நுணுக்கங்களையும் அமெரிக்காவுடன் தெளிவுபடுத்திக்கொள்ள ரஷ்யா முயன்று வருவதாக அவர் கூறினார்.
இஸ்ரேலிடமிருந்து விலகி
புடினின் கூட்டாளியான பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவையும் இந்தக் குழுவில் சேருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் உட்பட மத்திய கிழக்கின் அனைத்து முக்கிய தரப்பினருடனும் உறவுகளைச் சமநிலைப்படுத்த ரஷ்யா முயற்சித்து வந்துள்ளது.
ஆனால், காஸாமீது இஸ்ரேல் தொடுத்துள்ள இரண்டாண்டுகளுக்கும் மேலான இனப்படுகொலை போரும், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததும் தொடங்கியதிலிருந்து, புடின் இஸ்ரேலிடமிருந்து விலகி, ஈரான் போன்ற அதன் எதிரிகளுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறார்.
மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் தனிமைப்படுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா வளைகுடா அரபு நாடுகளுடன் நெருங்கிய உறவுகளையும் நாடியுள்ளது.
மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரை கிரெம்ளின் தொடர்ந்து விமர்சித்துள்ளதுடன், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |