சட்டென்று முடிவை மாற்றிய ட்ரம்ப்... ஈரான் தாக்குதல் தொடர்பில் புதிய விளக்கம்
ஈரானிய தலைமையின் உயர்மட்டத்தினர் மற்றும் பல பிராந்திய நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகு, ஈரானுக்கு எதிரான திட்டமிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவை மாற்றிய ட்ரம்ப்
வெனிசுலா பாணியில், ஈரானின் கார்க் தீவை அமெரிக்க இராணுவம் கைப்பற்றும் என சூளுரைத்திருந்த ட்ரம்ப், தற்போது தனது முடிவை சட்டென்று மாற்றியுள்ளார்.

தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானியத் தலைமையின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி என்ற முறையில், இன்று மாலை ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும், கலந்துரையாடல்களும் இறுதி முடிவுகளும் கருத்திலும் அதன் விரிவான விவரங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என பதிவு செய்துள்ள ட்ரம்ப்,
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை கடற்படை முற்றுகை முழு வீச்சில் அமுலில் இருக்கும் என்றும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எல்லைகள் இருப்பதில்லை
இதனிடையே, ஈரானில் உள்ள உத்திசார் ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரான அலி அக்பர் தரேனி தெரிவிக்கையில், ட்ரம்பின் பொறுப்பற்ற கொள்கையும், ஈரானுக்கு எதிரான அவரது பதற்ற அதிகரிப்பும், அமெரிக்கர்கள் எந்தவொரு அர்த்தமுள்ள ராஜதந்திரத்திற்கும் தயாராக இல்லை என்பதால், ராஜதந்திரத்தை நம்பியிருக்காமல் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஈரானில் வலுப்படுத்தியுள்ளது என்றார்.

மேலும், குண்டுகளை வீசி பேச்சுவார்த்தை நடத்தும் கொள்கையின் மூலம் அமெரிக்காவால் வெற்றிபெற முடியாது. ஈரான் இதனைத் தனது இருப்புக்கான போராட்டமாகவே கருதுகிறது; அத்தகைய போராட்டத்தில் எல்லைகள் என்று எதுவும் இருப்பதில்லை. ஈரானால் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்றார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸ் தெரிவிக்கையில், வளைகுடா நாடுகள் மற்றும் அவற்றின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூண்டால், அது இப்பிராந்தியம் முழுவதற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழி, இரு தரப்பும் முழுமையானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வை எட்டுவதே என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |