சீனாவிற்காக ரத்தம் சிந்திய அமெரிக்கர்கள் - டிரம்ப் சொல்வதன் பின்னணி என்ன?
சீனாவிற்காக அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தியது நினைவு கூறப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா ராணுவ அணிவகுப்பு
இரண்டாம் உலக போரில் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டை முன்னிட்டு, சீனா ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்தியது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக ரஷ்யா ஜனாதிபதி புடின் மற்றும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அணி வகுப்பில், நவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள், நீர்மூழ்கி ட்ரோன் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி சீனா தனது ராணுவ வலிமையை பறைசாற்றியது.
சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் விமர்சனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சீனாவை அதன் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து காத்து அதன் சுதந்திரத்தை பெற அமெரிக்கா அளித்த ஆதரவையும், சிந்திய இரத்தத்தையும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நினைவு கூறுவாரா என்பதே பெரிய கேள்வி.
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) September 3, 2025
( Donald J. Trump - Sep 02, 2025, 9:15 PM ET )
The big question to be answered is whether or not President Xi of China will mention the massive amount of support and “blood” that The United States of America ga… pic.twitter.com/DrgfakEsd3
சீனாவின் வெற்றி மற்றும் பெருமைக்கான தேடலில் பல அமெரிக்கர்கள் உயிர் நீத்துள்ளனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு மதிப்பளித்து அவர்களை நினைவு கூறுவார் என நம்புகிறேன்.
ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அற்புதமான சீன மக்களுக்கு இது ஒரு சிறந்த மற்றும் நீடித்த கொண்டாட்ட நாளாக அமையட்டும்.
நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, ரஷ்யா ஜனாதிபதி புடின் மற்றும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்காக ரத்தம் சிந்திய அமெரிக்கா
இதில், சீனாவின் விடுதலைக்கு அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தியது வரலாறாக அமைந்துள்ளது.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற மார்கோ போலோ பால சம்பவம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையேயான இரண்டாவது போரின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சீனாவை ஆக்கிரமிக்க தொடங்கிய ஜப்பான், சீன நகரங்களின் மீது குண்டுகளை வீசி பல பொதுமக்களை கொன்று குவித்தது.
1941 ஆம் ஆண்டில் பேர்ல் துறைமுக தாக்குதலுக்கு பின்னர், அமெரிக்கா அதிகாரபூர்வமாக இந்த போரில் இணைந்தது.
இதில், பறக்கும் புலிகள் என்ற பெயரிலான 300க்கும் அதிகமான அமெரிக்கா விமானிகள் குழு, சீனாவிற்கு சென்று ஜப்பானின் வான் தாக்குதலுக்கு எதிராக போராடியது. இதில் ஏராளமான அமெரிக்கா விமானிகள் உயிரிழந்தனர்.
சீனாவின் கடல் விநியோகபாதையை ஜப்பான் துண்டித்த போது, பர்மா வழியாக ஆயுதங்கள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை சீனாவிற்கு அமெரிக்கா வழங்கியது.
1941 மற்றும் 1945 ஆம் ஆண்டிற்கு இடையில், சுமார் 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் குத்தகை உதவியை சீனாவிற்கு அமெரிக்கா வழங்கியது.
ஜப்பானிய படைகளை எதிர்க்கவும், நேசப்படைகளுக்கு ஆதரவு வழங்கவும், சீன - பர்மா இந்தியா அரங்கு (CBI) உருவாக்கப்பட்டது. இதில், 2,50,000 அமெரிக்கா ராணுவ வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் சீனாவில் அதன் ராணுவத்திற்கு பயிற்சி வழங்கினர். இதில், 3000க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசிய பின்னர் ஜப்பான் போரில் சரணடைவதாக அறிவித்தது.
1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி, ஜப்பான் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நேச நாடுகள் இதனை 2ஆம் உலக போரின் முடிவாக கொண்டும் நிலையில், சீனா இதனை ஜப்பானை வென்ற சுதந்திர தினமாக கருதுகிறது.
சீனாவிற்காக உயிரிழந்த அமெரிக்கா வீரர்கள் இன்றும் சீனாவில் நினைவு கூறப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |