500 சதவீத வரி: இந்தியாவிற்கு ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து கெட்ட செய்தி
அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவிற்கு ஒரு கெட்ட செய்தியாக ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
போரை ஆதரிக்கின்றனர்
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் 500 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் செனட்டர்கள் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் எச்சரித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஜனாதிபதி விளாடிமிர் புடின் 50 நாட்களுக்குள் உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால், ரஷ்யா மீது 100 சதவீத இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தார்.
இதனிடையே, கிரஹாம் மற்றும் புளூமெந்தாலின் கூட்டு அறிக்கையில், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் உட்பட்ட நாடுகள் மலிவான ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் முன்னெடுப்புகளை ஆதரிக்கின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் புடின் தமது இலக்குகளே முக்கியம் என சமாதான ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் இருக்கிறார். இதனால் ரஷ்யாவிற்கு உதவும் எந்தவொரு நாட்டிற்கும் 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று இரு செனட்டர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஷ்யா மீதான பிரேரணை
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி வாய்ப்பு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பாகும் என்றே அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அடுத்த 50 நாட்களுக்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீத இரண்டாம் நிலை வரிகளை அமுல்படுத்துவதாக அறிவிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்துள்ளதையும் அந்த அறிக்கையில் பாராட்டியுள்ளனர்.
முன்னதாக, ரஷ்யா மீதான பிரேரணை தொடர்பாக இந்திய தூதரகம் மற்றும் தூதர் குழு செனட்டர் கிரஹாமுடன் தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |