மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு
ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
முழுமையான முற்றுகை
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கிறது.

அதற்குக் காரணம், அவர்களை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் அவர்களின் பொய்யான, வன்முறை மற்றும் தீய எண்ணம் கொண்ட தலைமைதான் என்றார்.
எனவே, ஈரானியத் துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள், அல்லது ஈரானிய சரக்குகள் தொடர்பான பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது மட்டுமே அமெரிக்கா முழுமையான முற்றுகையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் விதிக்க வேண்டும் என்று தான் முந்தைய நாள் முன்மொழிந்திருந்த திட்டத்திற்கு மாற்றாக அமையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்குத் தலைவர்களுடனான மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமெரிக்காவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 20 சதவீத கட்டணத்திற்கு பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாம் முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு
வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முன்னெடுக்கும் முதலீடுகள் மிகப் பிரம்மாண்டமானவையாக இருக்கும்; அதே வேளையில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் அவை மிகச் சிறந்தவையாகவும் அமையும்.
அனைவருக்கும் தெரிந்தபடி, வரலாற்றிலேயே எந்தவொரு நாடும் செய்யாத அளவிற்கு அமெரிக்காவில் நாம் மிகப்பெரிய அளவிலான டொலர் முதலீடுகளைச் செய்துள்ளோம்; ஆனால் இந்த புதிய முதலீடுகள் அந்த அளவை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

இதன் விளைவாக, தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் அமெரிக்காவிற்குள் குவியும்; இது அதிக ஊதியம் தரும் லட்சக்கணக்கான கூடுதல் அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்!
அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று வருகிறது; முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெறுகிறது. 52,000 போராட்டக்காரர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களை ஈரான் கொன்று குவித்த காலம் முடிந்துவிட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முதலீடு மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனவா அல்லது சந்தைப் போக்கை கட்டுப்படுத்த வழ்க்கமான ட்ரம்பின் வணிக உத்தியா என்பது உறுதி செய்யப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |