சீனாவிற்கு நெருக்கடி அளிக்க ஐரோப்பிய நாடுகளைத் தூண்டி விடும் ட்ரம்ப்
உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் சீனா மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளிடம் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள்
பாரிஸ் நகரில் கூடியுள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் காணொளி ஊடாக உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றார், அது போருக்கான நிதியுதவி செய்வது போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் ட்ரம்ப் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார் என தெரிவித்திருந்தார்.
உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்ய எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா என்றே கூறப்படுகிறது. ரஷ்யா மீது தடைகள் விதிப்பது குறித்தும், உக்ரைனின் வான்வெளியைப் பாதுகாத்தல் தொடர்பிலும் ட்ரம்புடன் விவாதித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ட்ரம்ப் - புடின் சந்திப்பு தோல்வியில் முடிந்ததன் பின்னர், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அவரது அடுத்த நகர்வு என்ன என்பது தொடர்பில் ட்ரம்ப் கருத்தேதும் தெரிவிக்க மறுத்து வருகிறார்.
இந்தியாவை வரிகளால்
ரஷ்ய எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இந்தியாவை வரிகளால் தண்டித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சீனா மீது துணிந்து நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் மறுத்து வருகிறார்.
மேலும், வட கொரியாவின் கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் இணைந்து சீனாவின் ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாகவே ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவை நினைவுகூரும் வகையில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பை முன்னெடுத்த சீனா, அதில் சிறப்பு விருந்தினர்களாக கிம் மற்றும் புடினை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |