ரூ 3,300 கோடி மதிப்பிலான பறக்கும் மாளிகையைப் பரிசாகப் பெறும் ஜனாதிபதி ட்ரம்ப்
கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள 'பறக்கும் மாளிகையை' ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசாக ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் அரச குடும்பம்
குறித்த சொகுசு விமானமானது அவரது பதவிக்காலம் முடியும் மட்டும், உத்தியோகப்பூர்வ விமானமாக பயன்படுத்தப்படும். மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்பிற்கு கத்தார் அரச குடும்பம் பரிசாக அளிப்பதால், அதை அவரது பதவி காலம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தமது சொந்த பயன்பாட்டிற்கு என ட்ரம்ப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கத் தேவையில்லை அல்லது கத்தார் அரசாங்கத்திடமும் ஒப்படைக்க வேண்டியதில்லை. ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த வாரம் கத்தாருக்கு வருகை தரும்போது இந்தப் பரிசு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்னும் முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வெளிநாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு பரிசும், பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
மேலும், கத்தார் அரச குடும்பத்தில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ 3,387 கோடி மதிப்பிலான பரிசை ஏற்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் விரிவான விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பிடம் ஒப்படைக்கப்படும்
இதனிடையே, விமானம் முதலில் அமெரிக்க விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதனால் வெளிநாட்டு பரிசுகளுக்கான அரசியலமைப்பு வரம்புகளை அது மீறாது என்றும் கூறுகின்றனர்.
2029 ஜனவரி மாதம் மட்டுமே இந்த விமானம் ட்ரம்பிடம் ஒப்படைக்கப்படும். ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள ட்ரம்ப், தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருகிறார்.
இந்த அரசுமுறை பயணத்தின் இடையே, ட்ரம்பின் தனிப்பட்ட தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |