புகலிடக் கோரிக்கையாளர்களால் சீரழியும் ஐரோப்பா: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
புகலிடக் கோரிக்கையாளர்களால் ஐரோப்பா சீரழிவதாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவை மீட்க முடியாது
ஸ்கொட்லாந்தில் இருந்து அமெரிக்கா புறப்படும் நிலையில், தமது விமானமருகே செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட ட்ரம்ப், பல ஐரோப்பிய நாடுகள் இந்த பயங்கரமான படையெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
குடியேற்ற நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த செயற்பாடு இல்லை எனில், இனி ஒருபோதும் ஐரோப்பாவை மீட்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பாவின் பல தலைவர்கள் திறம்பட நடவடிக்கை முன்னெடுப்பதாகவும், ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் பெயர்களை தம்மால் குறிப்பிட முடியும் என்றும், ஆனால் மற்றவர்களை சங்கடப்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் பதிலளித்துள்ளார். மேலும், கடந்த மாதத்தில் ஒருவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையாத வகையில் தமது நிர்வாகம் செயல்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மன்றத்தின் 2020 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பாவில் மட்டும் 87 மில்லியன் புலம்பெயர் மக்கள் குடியிருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
புலம்பெயர் கொள்கை
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே புலம்பெயர் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்.
மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தவும் செய்துள்ளார்.
இருப்பினும், அவரது கடுமையான புலம்பெயர் கொள்கை, உலகிலேயே அதிக புலம்பெயர்ந்தோர் மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்காவிலும் பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |