மீட்டெடுக்க வேண்டும்... இராணுவத்திற்கு திடீரென்று ஆணையிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்
பனாமா கால்வாயை மீட்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனது இராணுவத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்வாயை மீட்டெடுக்கும்
தீவிரமாக வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் காங்கிரசில் ஆற்றிய உரையின் போது, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிக்கையில், நமது தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, எனது நிர்வாகம் பனாமா கால்வாயை மீட்டெடுக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரண்டு அமெரிக்க அதிகாரிகள், மீட்டெடுப்பது என்றால் என்ன என்பது குறித்து தெளிவு இல்லாத போதிலும், ட்ரம்பின் நிர்வாகம் இந்த உத்தியை முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, கடந்த ஜனவரி மாத இறுதியில் பதவியேற்பதற்கு முன்னதாக, கரீபியன் கடலை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் அந்த கால்வாயில் இராணுவத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை ட்ரம்ப் நிராகரிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், ட்ரம்பின் இலக்கை அடைவதற்கான திட்டங்களில் அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தற்போது உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா அழுத்தம்
இதனிடையே, பனாமா இராணுவத்தின் ஒத்துழைப்பை பொறுத்தே அமெரிக்க இராணுவம் களமிறக்கக் கூடும் என குறிப்பிடுகின்றனர். பனாமா கால்வாய் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ட்ரம்ப் கருதுவதாக கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்க-பனாமா ஒப்பந்தத்தில் நடுநிலைமை நிலைநாட்டப்பட்டுள்ள நடுநிலை கால்வாயில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக பனாமாவும் சீனாவும் மறுத்துள்ளன.
மட்டுமின்றி, சீனாவுடனான ஒரு பெரிய உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை பனாமா, புதுப்பிக்காததை அடுத்து, சீன உதவித் திட்டங்களைத் தடுக்க பனாமா அதிகாரிகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், சீனா ஒருபோதும் கால்வாயின் மேலாண்மையிலோ அல்லது செயல்பாட்டிலோ ஈடுபட்டதில்லை, அதன் விவகாரங்களில் தலையிட்டதும் இல்லை என சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 கப்பல்கள் பயன்படுத்தும் இந்தக் கால்வாய், பெரும்பாலும் அமெரிக்கா செலவிட்ட நிதியால் கட்டப்பட்டு 1914 ல் செயல்பாட்டிற்கு வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |