கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்: விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ட்ரம்ப்
ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது கருணைக்கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவைச் சேர்ந்தவர் ராமோஸ் (Noelia Castillo Ramos, 25) என்னும் இளம்பெண்.
அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ராமோஸ், 2022ஆம் ஆண்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார்.

தனக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ராமோஸ், தன் பெற்றோர்கள் தன்னைக் கவனித்துக்கொள்ளாததால், 13 வயதில், தான் அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
காப்பகத்திலிருக்கும்போது, தான் பலமுறை வன்புணரப்பட்டதாக தெரிவித்த ராமோஸ், கடைசியாக, தான் தனது பதின்மவயதுகளிலிருக்கும்போது, மூன்று பேர் தன்னை கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனால் கடும் மன பாதிப்புக்குள்ளான அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கட்டிடம் ஒன்றிலிருந்து குதிக்க, அவர் உயிர் பிழைத்துவிட்டார், ஆனால், கீழே விழுந்து அடிபட்டதில் அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது.
பல ஆண்டுகளாக கடும் மனவேதனையும் உடல் வேதனையும் அனுபவித்துவந்த ராமோஸ், கருணைக்கொலை செய்யப்பட அனுமதி கோரினார்.
ராமோஸின் கோரிக்கையை ஏற்று அவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்தன.
அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ராமோஸ் கருணைக்கொலை செய்யப்பட்டார்.
விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ட்ரம்ப்
இந்நிலையில், ராமோஸின் கருணைக்கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ராமோஸ் விடயத்தில், அமைப்பு ரீதியான பல மனித உரிமை மீறல்கள் இருக்கலாம் என அமெரிக்கா கருதுவதால், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஸ்பெயினில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், அரசு காப்பகத்தில் தங்கியிருந்த ராமோஸை கூட்டு வன்கொடுமை செய்த குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் ரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசி நேரத்தில் ராமோஸ் கருணைக்கொலை செய்யப்பட தயக்கம் காட்டியதாகவும், ஆனால், அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு, மனநலப் பாதிப்புகள் மற்றும் குணப்படுத்த முடியாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் விடயத்தில், ஸ்பெயின் நாட்டின் கருணைக் கொலைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்றும் கசிந்துள்ள ரகசிய ஆவணம் ஒன்று கூறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |