ட்ரம்பின் நகர்வு தோல்வியில் முடியும்... அமெரிக்கா - ஐரோப்பா போர் மூளும் அபாயம்: புடின் ஆதரவாளர் எச்சரிக்கை
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முன்னெடுக்கும் உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைகள் இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான போராக வெடிக்க வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருக்கமான ஆலோசகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
சாத்தியமற்ற ஒன்று
பத்திரிகை ஆசிரியரும் ரஷ்ய ஊடகங்களுக்கு செய்திகள் வழங்குபவருமான Sergey Poletaev என்பவரே, உக்ரைன் தொடர்பில் ட்ரம்பின் அமைதிக்கான மகத்தான திட்டம் அவர் எதிர்பார்ப்பதை விட கடினமாக இருக்கும் என்று வாதிடுகிறார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது என்பது ட்ரம்பின் உலகின் வணிக ஒப்பந்தங்களைப் போலல்லாமல் வேறுபட்டது என்றார். அது புவிசார் அரசியல், இராணுவம் மற்றும் கருத்தியல் சிக்கல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது என விளக்கமளித்துள்ளார்.
இதனால், பல சிக்கல்களுக்கு ஒரேயொரு தீர்வு என்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் Sergey Poletaev குறிப்பிடுகிறார். தற்போது சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க - ரஷ்ய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என்றால்,
ட்ரம்பின் அடுத்த இலக்கு நேட்டோ அமைப்பாக இருக்கும் என்றும், அது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ட்ரம்புக்கு எதிராக பதிலளிக்க தூண்டும் என்றும் Sergey Poletaev விளக்கமளித்துள்ளார்.
உக்ரைனால் ஏற்க முடியாது
அவர்களுக்கு இருப்பது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே என குறிப்பிட்டுள்ள Sergey Poletaev, ட்ரம்புடன் வெளிப்படையாக மோதுவது அல்லது ட்ரம்பின் திட்டங்களுக்கு வாய்மொழியாக ஒப்புக்கொண்டு, அமைதியாக சதிவேலை செய்வது என அவர் குறிப்பிடுகிறார்.
சவுதி அரேபியாவில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரைன் இல்லாமல் ரஷ்யாவும் அமெரிக்காவும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றன. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நிலையில், புதன்கிழமை அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா செல்லவிருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தமது பயணத் திட்டத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைன் அல்லது ஐரோப்பாவின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கபப்டும் எந்த ஒப்பந்தமும் உக்ரைனால் ஏற்க முடியாது என ஜெலென்ஸ்கி ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |