புடின், ட்ரம்ப் ஒப்புக்கொண்ட 30 நாள் ஒப்பந்தம்... உக்ரைனுக்கு சின்னதாய் நிம்மதி
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு புடினும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புடின் உத்தரவிட்டதாக
அதே வேளை, ஒரு விரிவான சமாதானத் திட்டத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் எனவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
இரு தலைவர்களுக்கும் இடையே நீண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ரஷ்ய இராணுவம் உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறு புடின் உத்தரவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், உக்ரைன் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஆதரவுடன் கூடிய 30 நாள் போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், 30 நாட்கள் போர் நிறுத்தம் என்பது உக்ரைன் அதிக வீரர்களைத் திரட்டவும், தன்னை மீண்டும் ஆயுதமயமாக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என ரஷ்ய ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, போர் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு தீர்வும் உக்ரைனுக்கு அனைத்து இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளையும் நிறுத்தியன் பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கருங்கடலில் கடல்சார் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், அத்துடன் முழுமையான போர்நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஆகியவை மத்திய கிழக்கு நாட்டில் உடனடியாகத் தொடங்கும் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்வாரா
ஆனால், இதில் உக்ரைன் அழைக்கப்படுமா என்பதில் வெள்ளை மாளிகை குறிப்பிடவில்லை. ஆனால், ரஷ்ய எரிசக்தி இலக்குகள் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை நிறுத்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யாவின் 2022 படையெடுப்பை அடுத்து, உக்ரைன் அதன் மிகப் பெரிய அண்டை நாடான ரஷ்யாவின் உட்பகுதிகளில், எரிசக்தி அமைப்புகள் உட்பட, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் போராட முயன்று வருகிறது.
ஆனால் அதை பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தி வரும் ரஷ்யா தகுந்த பதிலடியும் அளித்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய மோதலாக உருவெடுத்துள்ள ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முதல் படி என்று நம்பும் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு டிரம்ப் புடினை வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது அல்லது காயப்படுத்தியுள்ளது, மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர வைத்துள்ளது. தற்போதைய இந்த தொலைபேசி உரையாடல், உக்ரைனுக்கு லேசான நிம்மதியை அளிக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |