இந்திய ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டம் - நிராகரித்த ட்ரம்ப்
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையாக இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டத்தை ட்ரம்ப் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடங்கிய போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த போரில் இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், இந்த போரில் இந்திய ராணுவத்தை அமைதிப்படையாக பயன்படுத்தும் பரிந்துரையை ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்களான Maggie Haberman மற்றும் Jonathan Swan எழுதிய 'Regime Change: Inside the Imperial Presidency of Donald Trump' என்ற புத்தகத்தில் இது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அமைதி காக்கும் படை
ட்ரம்ப் 2வது முறையாக ஜனாதிபதியான 10 நாட்களுக்கு பின்னர் ஜனவரி 30 அன்று, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து ஓவல் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அந்த ஆலோசனையின் போது, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான சிறப்புத் தூதரான, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெலாக், "அமெரிக்கா முதன்மைத் திட்டம்: ரஷ்யா-உக்ரைன் போருக்கான ட்ரம்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்” என்ற தலைப்பிலான ஒரு வரைவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்த வரைவில், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகள் மீதான ரஷ்யாவின் உரிமைகோரல்களை அமெரிக்கா முறையாக அங்கீகரிக்காது, அதே நேரத்தில் உக்ரைன் அந்தப் பகுதிகளை இராணுவ பலத்தின் மூலம் மீட்க முயற்சிக்காது.
மேலும், போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கும் அமல்படுத்துவதற்கும், பிரான்ஸ், பிரித்தானியா நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பலாம் என்று கெல்லாக்கின் வரைவு பரிந்துரைத்தது.
நேட்டோ படைகள் அனுப்பப்பட்டால் அது ரஷ்யாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, போரினை சிக்கலுக்கு கொண்டு செல்லும் எனக்கூறி துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அதேவேளையில், ஐரோப்பியாவிற்கு வெளியே சவுதி அரேபியா அல்லது இந்தியாவின் படைகளை அமைதி காக்கும் படைகளாக உக்ரைனுக்கு அனுப்பலாம் என ஜே.டி.வான்ஸ் பரிந்துரைத்துள்ளார்.

நிராகரித்த ட்ரம்ப் ஆனால், "இந்தியர்கள் இதை செய்யமாட்டார்கள், அவர்கள் இது போன்ற விடயங்களுக்கு விலை கொடுக்க மாட்டார்கள்" எனக்கூறி ட்ரம்ப் ஜே.டி.வான்ஸின் பரிந்துரையை நிராகரித்ததாக புத்தகம் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தின் ஐநா அமைதி காக்கும் பணிகள், தற்போது லெபனான், சூடான், காங்கோ, கோலன் ஹைட்ஸ், ஐவரி கோஸ்ட், ஹைட்டி, லைபீரியா ஆகிய நாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |