ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு
ஈரானில் அரசுக்கு எதிரானப் போராட்டங்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதை அடுத்து, இராணுவ நடவடிக்கை குறித்து அச்சுறுத்தி வந்த அமெரிக்க ஜனாதிபதி, சீனா உட்பட பல நாடுகள் பாதிக்கப்படும் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம்
திங்களன்று அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் மீது 25 சதவீத வரி விகிதத்தை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக அமெரிக்காவால் பல்வேறு வகையான தடைகளை ஈரான் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மேலதிக விவரங்கள் எதையும் வழங்காமல், இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானியப் பொருட்களுக்கான முக்கிய ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே முன் வரிசையில் உள்ளன.
ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் 25 சதவீத வரிகள் உட்பட 50 சதவீத வரிகளை எதிர்கொள்ளும் இந்தியா தற்போது ஈரான் விவகாரத்தில் 25 சதவீத வரிகளுடன் சேர்த்து, 75 சதவீத வரி செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வரி விதிப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ ஆவணம் எதுவும் வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. மேலும், அந்தத் வரிகளை விதிப்பதற்கு ட்ரம்ப் பயன்படுத்தவிருக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் குறித்த தகவல்களும் இல்லை.

அல்லது இந்த வரிகள் ஈரானின் அனைத்து வர்த்தகப் பங்காளிகளையும் இலக்காகக் கொண்டிருக்குமா என்பது குறித்த தரவுகளும் வெளியிடப்படவில்லை.
ஈரானில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகள் தரப்பு ஈரான் அதிகாரிகளைச் சந்திக்கக்கூடும் என்றும், தாம் ஈரானிய எதிர்க்கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
அத்துடன் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் உட்பட பல வழிகளில் அதன் தலைவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறார். ஈரானில் நிலவும் சூழ்நிலைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வந்த நிலையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயார் நிலையில் இருப்பதாகவே அதிகாரிகள் தரப்பு திங்களன்று தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, புதிய திருப்பமாக, திங்கட்கிழமை அன்று, அரசாங்கத்திற்கு ஆதரவான பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆட்சிக்கு ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் கலந்துகொண்டு தெஹ்ரான் வீதிகளில் இறங்கினர்.
ஆனால், நோர்வேயைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் என்ற தன்னார்வ அமைப்பு, அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் குறைந்தது 648 பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் ஒன்று, ஈரானிய அதிகாரிகளால் 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |