ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க போர் கப்பல்கள் - டிரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்காவின் பாரிய போர் கப்பல் படையை ஈரான் நோக்கி அனுப்பியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா
ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Credit : Reuters
தொடர்ந்து போராடுங்கள் உங்களுக்கான உதவி வந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில், ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது.
இந்த சூழலில், அமெரிக்காவின் பெரிய கப்பற்படை ஒன்று ஈரானை நோக்கி சென்றுகொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சொல்வது என்ன?
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "நாங்கள் ஈரானை கண்காணித்து வருகிறோம். எங்களின் மிகப்பெரிய போர்க்கப்பல் படை (Armada) ஈரான் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

ஒருவேளை நாம் அதை பயன்படுத்த வேண்டியதில்லை. பார்ப்போம். மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டால் தாக்குதல் நடத்துவோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஏற்கனவே கடந்த வாரம், தனது USS ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியது.
இந்த போர் கப்பலானது, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி, மலாக்கா ஜலசந்தியைக் கடந்து, பாரசீக வளைகுடாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது தனது கப்பல் டிராக்கிங் சிஸ்டத்தை(AIS) நிறுத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இரு நாட்களுக்கு முன்னர், 12 F-15 போர் விமானங்களை ஜோர்டானில் உள்ள பிரித்தானியாவிற்கு சொந்தமான ராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளது.

அதே போல், USS George H.W. Bush (CVN-77) என்ற அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலும் வர்ஜீனியாவின் நோர்போக்கில் இருந்து புறப்பட்டுள்ளது.
இந்த ராணுவ நகர்வுகள் மூலம் கிட்டத்தட்ட அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையில் உறுதியாக உள்ளதாகவே கருதப்படுகிறது.
அதேவேளையில், டிரம்ப் இந்த கருத்தையடுத்து ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தளபதி முகமது பாக்பூர் விடுத்த எச்சரிக்கையில், "எங்கள் விரல்கள் துப்பாக்கியின் விசையில் உள்ளன.
அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தவறான கணக்குப் போட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் அனைத்தும் தகர்க்கப்படும். உச்சத்தலைவரின் கட்டளையை நிறைவேற்ற தயாராக உள்ளோம்" என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |