ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் வரையில்... சீனா அளித்த வாக்குறுதி
தாம் பதவியில் இருக்கும் வரையில் சீனா தைவானை ஆக்கிரமிக்காது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருக்கும் மட்டும்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தைவான் மற்றும் சீனா விவகாரமும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்றது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தாம் ஆட்சியில் இருக்கும் மட்டும் அது நிறைவேற வாய்ப்பில்லை என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் மட்டும் அப்படியான ஒரு முடிவுக்கு வருவதில்லை என ஜனாதிபதி ஜி தம்மிடம் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதை தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட ட்ரம்ப், ஆனால் தாம் பொறுமையானவன் என்றும், சீனா அதைவிட பொறுமையான நாடு என ஜனாதிபதி ஜி தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததன் பின்னர், ஜூன் மாதம் ட்ரம்பும் ஜியும் முதல் முறையாக தொலைபேசியில் உரையாடியுள்ளனர். ஜனாதிபதி ஜி தம்மை ஒருமுறை தொலைபேசியில் அழைத்ததாக ஏப்ரல் மாதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
தைவான் விவகாரம்
ஆனால் அழைப்பு எப்போது நடந்தது என்பதை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. தைவானை தங்கள் பிராந்தியமாகவே பார்க்கும் சீனா, தங்கள் நாட்டுடன் இணைக்க, தேவை என்றால் இராணுவத்தைப் பயன்படுத்தவும் தயங்காது என்றே கூறி வருகிறது.
ஆனால், சீனாவின் இந்த உரிமை கோரலை தைவான் கடுமையாக நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், தைவான் விவகாரம் சீனா-அமெரிக்க உறவுகளில் மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சனை என வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தைவானுக்கான முதன்மையான ஆயுத விற்பனையாளராக இருந்துவரும் அமெரிக்கா, சர்வதேச அளவில் தைவானை ஆதரித்தும் வருகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகள் போன்று தைவானுடன் முறையான தூதரக உறவுகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |