வெனிசுலா எண்ணெய் வருவாய் இனி அமெரிக்காவிற்கு: பாதுகாப்பு உத்தரவு வெளியிட்ட ட்ரம்ப்
நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனி வெனிசுலா எண்ணெய் வருவாய் மொத்தமும் அமெரிக்கா கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் வளம் இலக்கு
குறித்த நகர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் முடியாதபடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், மதுரோவின் கைது நடவடிக்கை என்பது வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தை இலக்கு வைத்து ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கை என்பது உறுதியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சந்திப்பில் வெனிசுலாவில் முதலீடு செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளை ட்ரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால், பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் இல்லாமல் வெனிசுலாவில் முதலீடு என்பது சாத்தியமற்றது என ExxonMobil நிர்வாகிகள் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களின் பெரும்பான்மை கட்டுப்பாட்டை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அப்போதைய ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து 2007ல் ExxonMobil மற்றும் ConocoPhillips ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவை விட்டு வெளியேறின.
மட்டுமின்றி, வெனிசுலா தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பில்லியன் கணக்கான டொலர்களை மீட்க அவர்கள் போராடி வருகின்றனர். தற்போது வெனிசுலாவில் செயல்பட உரிமம் பெற்ற ஒரே அமெரிக்க நிறுவனம் Chevron மட்டுமே.

வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்ட ட்ரம்பின் நிர்வாக உத்தரவில், அமெரிக்க கருவூலக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் வெனிசுலா எண்ணெய் வருவாயை சிறப்பு நடவடிக்கை அல்லது நீதித்துறை செயல்முறையிலிருந்து பாதுகாக்க தேசிய அவசரநிலையை அறிவிக்கப்படுகிறது.
ஐந்தில் ஒரு பங்கு
இதனால், வெனிசுலா எண்ணெய் வருவாய் என்பது நீதிமன்றம் அல்லது வெனிசுலா நிர்வாகத்தால் உரிமை கோர முடியாது. 2019 முதல் அமெரிக்காவால் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வெனிசுலா, உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதுடன், ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயை வழங்கும் ஒரு முக்கிய நாடாகவும் இருந்தது.
ஆனால், ஓபெக் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024-ல் வெனிசுலா உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் ஒரு சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்தது.

பல ஆண்டுகளாக நீடித்த முதலீட்டுக் குறைபாடு, தடைகள் மற்றும் வர்த்தகத் தடைகளால் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்நாட்டு எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பதற்கான தனது போராட்டத்தில், வெனிசுலாவின் பிரம்மாண்டமான எண்ணெய் வளங்களை ட்ரம்ப் ஒரு பெரும் வரப்பிரசாதமாகக் கருதுகிறார் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |