சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளதுடன் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பையும் ரத்து செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆக்ரோஷமான நகர்வு
அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக சீனா உடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரை மீண்டும் தூண்டியுள்ளது. மேலும், சீனாவின் அசாதாரண ஆக்ரோஷமான நகர்வு இதுவென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,
இந்த கூடுதல் வரிகள், அத்துடன் அனைத்து முக்கியமான மென்பொருட்கள் மீதான அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் என அனைத்தும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றார்.
சீனா இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை, ஆனால் அவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை என ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்ததால் பங்குச் சந்தைகள் சரிவடைந்தன. வெள்ளிக்கிழமை Nasdaq 3.6 சதவீதமும், S&P 500 2.7 சதவீதமும் சரிந்தன.
ஏற்கனவே, ஃபெண்டானில் வர்த்தகத்தில் சீனா மறைமுக உதவி செய்வதாகக் குற்றம் சாட்டி, ட்ரம்ப் கொண்டு வந்த வரிகளின் கீழ், சீனப் பொருட்கள் மீது தற்போது 30 சதவீத வரி அமுலில் உள்ளது. பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 10 சதவீத வரி விதித்துள்ளது.
முன்னதாக தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விவரிக்கும் கடிதங்களை சீனா உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மிகவும் விரோதமானது
அரிய மண் தாதுக்களின் உலகளாவிய உற்பத்தி மற்றும் செயலாக்கத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் உலகை மொத்தமாக கைப்பற்ற சீனாவை அனுமதிக்க முடியாது என்றே ட்ரம்ப் சாடியுள்ளார்.
மேலும், சீனாவின் இந்த நிலைப்பாடு மிகவும் விரோதமானது என்றும் விவரித்துள்ளார். மட்டுமின்றி, சீனா தற்போது ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது தமக்குப் புரியவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனாவின் இந்த திடீர் முடிவு குறித்து பல நாடுகள் அமெரிக்காவை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சில வாரங்கள் முன்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் முக்கியத்துவம் தொடர்பில் பெருமையாக பேசியிருந்த ட்ரம்ப், அடுத்த ஆண்டு சீனாவிற்கு விஜயம் செய்வதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சீனாவின் இந்த திடீர் நகர்வு, ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |