ட்ரம்பின் வரி விதிப்பால் பெரும் கவலையில் முகேஷ் அம்பானி... தொழில் ஒன்று பாதிக்கப்படும் அபாயம்
கூடுதல் அமெரிக்க வரி மற்றும் தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தின் தாக்கம் குறித்த வளர்ந்து வரும் கவலைகள் முதலீட்டாளர்களை பதட்டப்படுத்தியதால், பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிவடைந்து 80,000 புள்ளிகளுக்குக் கீழே பதிவானது.
ரிலையன்ஸ் எச்சரிக்கை
பங்குச் சந்தைகளில் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் மோசமான இழப்புகள் பங்குச் சந்தைகள், வர்த்தகர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்க செய்தன.
கடந்த வாரம், ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரிகளை அறிவித்தார், இது ஆகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வந்தது. ஆனால் புதன்கிழமை, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்தது. இதனால் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் அமெரிக்கா விதித்த மிக உயர்ந்த வரிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியானது ஆகஸ்டு 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும். இந்தப் புதிய வரியானது இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் சந்தைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, புவிசார் அரசியல் மற்றும் வரிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் வணிகத்தைத் தடுக்கக்கூடும் என்றும், இதன் விளைவாக விநியோகம் மற்றும் தேவையின் சமநிலையைப் பாதிக்கும் என்றும் நிறுவனம் எச்சரித்தது.
வியாழக்கிழமை, ரிலையன்ஸ் பங்கு விலை 1.0% சரிந்தது, ஆனால் வர்த்தகம் முடிவடையும் போது 0.2% என பதிவானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் பங்கு கிட்டத்தட்ட 11% சரிந்துள்ளது.
வருவாய் ரூ10.71 டிரில்லியன்
குஜராத்தின் ஜாம்நகரில் ஒரே இடத்தில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குகிறது. இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு என பெட்ரோல், டீசல், ஏடிஎஃப் மற்றும் பிற பொருட்களை தயாரிக்க பல்வேறு வகையான கச்சா எண்ணெயை பதப்படுத்துகிறது.
கூடுதலாக 25% வரியை விதிக்கும் முன், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை மலிவு விலைக்கு வாங்கி மறு ஏற்றுமதி செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் பெருமளவு கச்சா எண்ணெய் வாங்குவதுடன், வெளிச்சந்தைகளுக்கு பெரும் ஆதாயத்துடன் விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2025 நிதியாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் 80.5 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தியது. மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெய் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் அதிகபட்ச வருவாய் மற்றும் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
அதாவது அதன் வருவாய் ரூ.10.71 டிரில்லியன் எனவும் வருமானம் ரூ 81,309 கோடி எனவும் கூறப்படுகிறது. தற்போது ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தங்கள் தொழில் பாதிக்கும் என்ற பெரும் கவலையில் முகேஷ் அம்பானி தமது அரசியல் செல்வாக்கை தீவிரமாக பயன்படுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |