ட்ரம்பின் 26 சதவீத வரி விதிப்பால்... இந்தியா எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேரிடும்
தமது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடி என குறிப்பிட்டு, இந்தியா மீது 26 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ளார்.
மொத்தம் 129.2 பில்லியன்
இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையில், இந்த 26 சதவீத வரி விதிப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தின் மீதும் வரி விதித்துள்ள ட்ரம்பால் ஒட்டுமொத்த சர்வதேச வர்த்தக சூழலும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய நாணய மதிப்பு மேலும் குறையக்கூடும், அந்நியச் செலாவணி இருப்புக்கள் சரிவடையக்கூடும். வேலையின்மை அதிகரிக்கக்கூடும், பங்குச் சந்தை இன்னும் நீண்ட காலத்திற்கு சிவப்பாகவே இருக்கலாம்.
2024 ஆம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 129.2 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா 41.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தாலும், அது 87.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய தயாரிப்புகளை இறக்குமதி செய்தது.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா 45.60 பில்லியன் டொலர் வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்தது. அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் மருந்துகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், ரத்தினக் கற்கள், பெட்ரோலியப் பொருட்கள், தங்க நகைகள் மற்றும் ஆயத்த பருத்தி ஆடைகள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 14 பில்லியன் டொலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களையும், சுமார் 9 பில்லியன் டொலர் மதிப்புள்ள ரத்தினங்கள் மற்றும் நகைகளையும் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
இதுவரை இந்திய நிறுவனங்கள் மின்னணுப் பொருட்களுக்கு 0.41% வரியும், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகளுக்கு 2.12% வரியும் செலுத்தியுள்ள நிலையில் தற்போது 26 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்தத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தத் துறைகளில் ஏற்றுமதி குறையவில்லை என்றால், இந்தியா 6.76 பில்லியன் டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். முன்னதாக மின்னணு சாதனங்களுக்கு 57.4 மில்லியன் டொலரும், ரத்தினங்கள் மற்றும் நகைகளுக்கு 190.8 மில்லியன் டொலரும் வரியாக செலுத்தினர்.
தொடர்ந்து கோரிக்கை
இந்த இரண்டு பொருட்களுக்கும் இனி இந்தியா 6.5118 பில்லியன் டொலர் கூடுதலாகச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள் மற்றும் அலுமினியம் ஏற்றுமதிக்கும் 25 சதவீத வரி செலுத்த வேண்டும்.
இந்தியா 9 பில்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் மற்றும் எரிசக்தி உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் ட்ரம்பின் வரி விதிப்பில் இருந்து இந்த துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் துறையில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் உலகிலேயே மிக அதிகமாகும், அதாவது 113.1% முதல் 300% வரை இருக்கும். வேளாண் பொருட்களுக்கான வரிகளை ரத்து செய்ய அமெரிக்கா தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கைகளில் ஒரு சிறிய பகுதியைக் கூட இந்தியா ஏற்க ஒப்புக்கொண்டால், அங்கிருந்து கோதுமை, சோளம், சோயாபீன்ஸ், கோழி, பால் பொருட்கள் மற்றும் பழங்களால் இந்திய சந்தைகள் நிரம்பி வழியும்.
அது இந்திய வேளாண் மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த நிலையில், பதிலுக்கு வரி விதிக்கும் நாடுகள் மீது வரியின் அளவை அதிகரிக்கவும் ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |