ட்ரம்பின் அந்த முடிவு... பறிபோகும் 400,000 வேலை வாய்ப்புகள்: எச்சரிக்கும் ஒரு நாடு
மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகிதம் வரி விதிக்கும் ட்ரம்பின் முடிவால் அமெரிக்காவில் 400,000 வேலை வாய்ப்புகள் பறிபோகும் என மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் எச்சரித்துள்ளார்.
மெக்சிகோவும் வரி விதிக்கும்
அத்துடன், அமெரிக்க நுகர்வோரே மிக மோசமாக பாதிக்கப்பட இருப்பதாகவும் ஷீன்பாம் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அமெரிக்கா வரி விதிக்கும் முடிவில் உறுதியாக இருக்கும் என்றால், மெக்சிகோவும் பதிலுக்கு வரி விதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மெக்சிகோவின் பொருளாதாரத்துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் தெரிவிக்கையில், பழிவாங்கும் இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
ட்ரம்பின் முடிவு அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றும் மார்செலோ எப்ரார்ட் தெரிவித்துள்ளார். மேலும், புதிய இந்த வரிவிதிப்பு என்பது மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா இடையே உறுதி செய்யப்பட்ட USMCA வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி விதிப்பால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் சரியும், வளர்ச்சி சதவிகிதம் குறையும், அத்துடன் மெக்சிகோவில் இருந்து உற்பத்தியை முன்னெடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இருமடங்காக வரி செலுத்தும் நிலை உருவாகும் என்றார்.
டொனால்டு ட்ரம்ப் உறுதி
Ford, General Motors, Stellantis உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்றார். அமெரிக்காவில் விற்கப்படும் 88 சதவிகித பிக்கப் லொறிகள் மெக்சிகோவில் தயாரிக்கப்படுகின்றன, புதிய வரி விதிப்பால் அதன் விலை உயர்வைக் காணும்.
இதன் சாரதிகளே பெருவாரியாக டொனால்டு ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் என்றும் மார்செலோ எப்ரார்ட் தெரிவித்துள்ளார். இனிமேல் இந்த வாகனங்களின் சராசரி விலை 3,000 டொலர்கள் வரையில் அதிகரிக்கும் என்பது எங்கள் கணிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், போதைப்பொருள் - குறிப்பாக ஃபெண்டானில் - மற்றும் அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் வரையில் வரி விதிப்பு அமுலில் இருக்கும் என்றே டொனால்டு ட்ரம்ப் உறுதியுடன் கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |