இரு நாடுகள் மீதான ட்ரம்பின் நடவடிக்கை... அமெரிக்க மக்களுக்கு பேரிடியாக மாறும் அபாயம்
கனடா மற்றும் மெக்சிகோ எண்ணெய் மீது வரி விதிக்க டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவு அமெரிக்காவில் எரிபொருளுக்கு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிக விலை செலுத்தும் நிலை
அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் கனேடிய எண்ணெயை இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவிகிதம் மத்திய மேற்கு பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
மட்டுமின்றி மெக்சிகோவில் இருந்து ஒரு நாளைக்கு 450,000 பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது, அமெரிக்க வளைகுடா கடற்கரையில் குவிந்துள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இது சுத்திகரிக்கப்படுகிறது.
தற்போது இந்த இரு நாடுகளின் எண்ணெய் இறக்குமதி மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அமெரிக்க நுகர்வோர் அதிக விலை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்று எதிர்பார்க்கலாம் என்றே வர்த்தக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க மக்கள் இந்த தாக்கத்தை உணரும் முன்னர் வரி விதிப்பு நடவடிக்கைகளை ரத்து செய்யப்படும் என நம்புவதாக அமைப்பு ஒன்றும் குறிப்பிட்டுள்ளது.
வேறு வழியில்லை
கனடா மற்றும் மெக்சிகோ இறக்குமதிகளுக்கு 25 சதவிகித வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகித வரியும் செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
கனடாவிலிருந்து வரும் எரிபொருட்களுக்கு 10 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது, ஆனால் மெக்சிகோ எரிபொருள் இறக்குமதிக்கு முழுமையாக 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் சந்தையில் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தெரிவிக்கையில், கூடுதல் செலவை நுகர்வோரிடம் வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளன.
மேலும், அதிக கட்டணம் செலுத்தி கனேடிய எண்ணெய் இறக்குமதி செய்வதை விட, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிக்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |