ஈரான் போர்... ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் நன்றி சொன்ன ட்ரம்ப்
ஈரானுடனான போரின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நடுநிலையாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தெரிவிக்க
ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தனது முயற்சிகளுக்கு அவர்கள் இருவரும் முட்டுக்கட்டை போடவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இந்த விவகாரத்தை மிகவும் சிறப்பாக மாற்றியமைத்ததால் நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அந்த மோதலில் இருந்து விலகி இருந்ததற்காக தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்கள் முடிவெடுத்திருந்தால் இதை எங்களுக்கு இன்னும் மிகவும் கடினமாக்கியிருக்க முடியும் என்றார்.
ஆனால், ஜப்பான் முதல் ஐரோப்பா வரையிலான அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரான் முடக்கியுள்ள ஹார்முஸ் நீரிணையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலோ அல்லது அது தொடர்பான ராணுவ நடவடிக்கையிலோ உதவவில்லை என்று விமர்சித்திருந்த ட்ரம்ப்,
தற்போது சீனா மற்றும் ரஷ்யா தொடர்பில் தனது முந்தைய கருத்துகளுக்கு முரணான வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உண்மையில் ரஷ்யாவும் சீனாவும் ஈரானுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றன.
சீனா கண்டித்துள்ளது
சீனாவின் உளவுக் கப்பல்கள் இந்தப் போர் காலங்களில் ஈரானுக்கு உதவியதாகத் தகவல்கள் பல வெளியாகின. மட்டுமின்றி, இந்தப்போர் மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கக்கூடும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
மட்டுமின்றி, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை, அந்த நாட்டின் இறையாண்மை மீதான அப்பட்டமான மீறல் என்று சீனா கண்டித்துள்ளது. மேலும், ராணுவப் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுள்ள பொருட்களை சீனா ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளே உறுதி செய்திருந்தனர்.

அமெரிக்காவின் தடைகளை மீறி, போர் காலக்கட்டத்தில் ஈரானின் முக்கிய வாடிக்கையாளர்களாகச் சீனாவின் சுயாதீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களே திகழ்ந்து வந்தன.
ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவர ஜி ஜின்பிங் உதவியதாகவும், ஈரானுக்கு பெரிய ஆயுதங்களை அனுப்பாமல் அவர் தங்களுக்கு உதவியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |