நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப்
ஹார்முஸ் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தமளிக்கும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிடுவேன் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவசர அறிக்கை
ட்ரம்புடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டாரத்தில் இருந்தே இந்தத் தகவல் கசிந்துள்ளது. இஸ்ரேல் அழுத்தம் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நாள் முதலே ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்த நீரிணையூடாகவே உலகின் தினசரி எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஒரு முடிவை எட்டும் வகையில் நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அந்த அழைப்பை ஏற்க பல ஐரோப்பிய நாடுகள் மறுத்ததுடன், இது எங்கள் போர் அல்ல எனவும் பதிலளித்தன.
இதற்கு பதிலடியாக உக்ரைன் போருக்கு அமெரிக்க ஆயுதங்களின் கொள்முதலை உறுதி செய்யும் நேட்டோவின் Purl என்ற ஐரோப்பிய நிதியுதவி அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த இருப்பதாக மிரட்டியுள்ளார்.
ட்ரம்பின் மிரட்டலை அடுத்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய குழு ஒன்று மார்ச் 19 அன்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான உரிய முயற்சிகளுக்குப் பங்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தனர்.
கடும் கோபத்தில்
இது நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவின் அழுத்தம் காரணமாகவே நடந்தது என்றும், ட்ரம்ப், பர்ல் திட்டத்திலிருந்தும் பொதுவாக உக்ரைனை ஆதரிப்பதிலிருந்தும் விலகுவதாக அச்சுறுத்தியிருந்தார் என்றே கூறப்படுகிறது.
அவசரமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, வெளியாவதற்கு முந்தைய இரண்டு நாட்களில், ரூட்டே, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் பல முறை தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

மட்டுமின்றி, ட்ரம்பை சமாதானப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக ரூட்டே அடுத்த வாரம் அமெரிக்கா பயணிக்க உள்ளார். ஹார்முஸ் விவகாரத்தில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவிடம் தொலைபேசியில் விவாதித்த ரூட்டே, ஐரோப்பிய நாடுகள் உதவ மறுத்ததை அடுத்து ட்ரம்ப் நேச நாடுகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்றே தெரிவித்துள்ளார்.
மார்ச் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் பின்னர் மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளன. தற்போது அந்த எண்ணிக்கை 35 நாடுகளாக மாறியுள்ளது.
பிரித்தானியாவில் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த 35 நாடுகள் கூட்டணியில் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |