கிரீன்லாந்து தொடர்பில் புதிய குண்டை வீசிய ட்ரம்ப்: கடுமையான நடவடிக்கை உறுதி
கிரீன்லாந்தை தான் கையகப்படுத்துவதை ஆதரிக்காத நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதிக்க இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் அச்சுறுத்தல்
கிரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கக்கூடும். எங்களது தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுகிறது, எனவே நான் அவ்வாறு செய்யலாம் என ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிக்கு ஆதரவை திரட்டும் நோக்கில், டென்மார்க்கில் பேச்சுவார்த்தைக்காக இரு கட்சி காங்கிரஸ் குழு சென்ற நிலையில், கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் நேற்று கிரீன்லாந்திற்குச் சிறிய எண்ணிக்கையிலான படைகளை அனுப்புவதாக அறிவித்தன.
இதில் பிரான்ஸ் 13 பேர்களைக் கொண்ட ஒரு பிரிவை கிரீன்லாந்தில் களமிறக்கியுள்ளது. இந்த நிலையில், 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதன்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த தூதுக்குழுவின் வருகை அமைந்துள்ளது. அந்தக் கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப்புடன் தங்களுக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு இருப்பதாக டென்மார்க் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்தில் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது. இது ஏதோ ஒரு முட்டாள் தொடர்ச்சியாக பேசுவதுதான் என்று 39 வயது உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சாத்தியமற்றது
ட்ரம்ப் தன்னிச்சையாக அப்படிச் செய்தால், அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்படுவார். காங்கிரஸில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்பினால், அவர்கள் முன்வர வேண்டும் என இன்னொரு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டென்மார்க் அந்தத் தீவில் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை அன்று நூக் நகரில் இராணுவ வீரர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனிடையே, கிரீன்லாந்தில் ஒரு இராணுவப் பயிற்சிக்காக ஐரோப்பியப் படைகளை களமிறக்குவவதன் நோக்கம், அமெரிக்கா உட்பட அனைவருக்கும் ஒரு அறிவிப்பை தெரிவிப்பதுதான் என்றும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளன என்பதை இது காட்டுகிறது என்றும் பிரெஞ்சு ஆயுதப் படைகளின் அமைச்சர் ஆலிஸ் ரூஃபோ கூறியுள்ளார்.
தற்போது வரி விதிப்பு தொடர்பில் ட்ரம்பின் எச்சரிக்கையானது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் பொருந்தும் என்றே கூறப்படுகிறது. ஆனால், ட்ரம்பின் மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் அஞ்சும் என எதிர்பார்க்க முடியாது என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |