விளாடிமிர் புடினை பின்பற்றி... கிரீன்லாந்து, பனாமா கால்வாயை கைப்பற்ற ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டு கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கையகப்படுத்த வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம்
தன்னாட்சி பெற்ற டென்மார்க் பிரதேசமான கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கையகப்படுத்த அமெரிக்கா இராணுவம் அல்லது பொருளாதார தடைகளைப் பயன்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப்,
இதில் இரண்டையும் நிராகரிக்க முடியாது என்றார். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவை நமக்குத் தேவை என குறிப்பிட்டுள்ளார். உண்மையில் தனது கருத்தில் அவர் தீவிரமாக இருக்கிறாரா அல்லது ஏதேனும் பேச்சுவார்த்தை தந்திரமாக என்பது தொடர்பில் நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால் டென்மார்க் மற்றும் பனாமா ஆகிய இரண்டும் தங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ஆலோசனையையும் நிராகரித்துள்ளன.
ஏற்கனவே தங்களின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை தனது ஆயுத வலிமையைப் பயன்படுத்தி ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து 2022ல் உக்ரைன் மீது முழு வீச்சிலான இராணுவ நடவடிக்கை அல்லது ஊடுருவலை விளாடிமிர் புடின் முன்னெடுத்தார்.
ஒரு மாகாணமாகவே
தற்போதும் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், விளாடிமிர் புடின் போன்று டொனால்டு ட்ரம்பும் தற்போது கிரீன்லாந்து, பனாமா கால்வாய் மற்றும் கனடாவையும் கையகப்படுத்த திட்டமிட்டு வருகிறார்.
மட்டுமின்றி, வெளிப்படையாக அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். கனடாவைப் பாதுகாக்க அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகிறது என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், கனேடிய கார்கள், மரம் மற்றும் பால் பொருட்களின் இறக்குமதியையும் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஒரு மாகாணமாகவே கனடா இருக்க வேண்டும் என்றும் பத்திர்கையாளர்களிடம் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இரண்டு நாடுகளும் இணைவதற்கு கடுகளவு வாய்ப்பும் இல்லை என ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |