ட்ரம்பால் பகுதி நேர வேலைகளை விட்டு வெளியேறும் இந்திய மாணவர்கள்
பல தசாப்தங்களாக, உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் அதிக ஊதியம் தரும் தொழில் வாய்ப்புகளைத் தேடும் இளம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு வரமாக இருந்து வருகிறது.
அதிகரித்த கண்காணிப்பு
ஆனால் தற்போது கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு மத்தியில் பல இந்தியர்களின் அமெரிக்க கனவு ஒரு சவாலான சோதனையாக மாறிவிட்டது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விசா நிராகரிப்பு அதிகரித்து வருவதாலும், பணியிடங்களில் அதிகரித்த கண்காணிப்பு மற்றும் பணி அனுமதிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும், பல இந்திய மாணவர்கள் தங்கள் கனவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி முதல் செப்டம்பர் 2024 வரை 64,008 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் 2023ல் 103,495 மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ட்ரம்ப் நிர்வாகம் அளிக்கும் நெருக்கடியால் உள்ளூர் மக்களையே வேலைக்கு அமர்த்தும் நிலை சர்வதேச மாணவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல்
மட்டுமின்றி, அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களின் அதிகரித்த கண்காணிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். கல்லூரி படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு ஓராண்டு காலம் வேலை பார்க்கும் OPT என்ற அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
F1 விசாவில் உள்ளவர்கள் வாரத்திற்கு 20 மணிநேரம் மட்டுமே வளாகத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், சர்வதேச மாணவர்கள் பலர் கூடுதல் பணம் சம்பாதிக்க இந்த நேர மற்றும் இட வரம்பை அடிக்கடி மீறுகிறார்கள்.
தற்போது ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், OPT அனுமதி பெற்றவர்களும் நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதால், தற்போது மாணவர்கள் பலர் பகுதி நேர வேலைகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை, குறிப்பாக வசதி குறைந்த பின்னணியில் இருந்து வரும் பலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |