உக்ரைன் போர்... புடின் குறித்து ஐரோப்பிய தலைவர்களிடம் ட்ரம்ப் இரகசியமாக சொன்ன விடயம்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்பவில்லை என்று ஜனாதிபதி டிரம்ப் ஐரோப்பிய தலைவர்களிடம் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புடின் விரும்பவில்லை
ரஷ்ய தரப்பு தற்போது உக்ரைன் போரில் வெற்றிபெற்றுவரும் நிலையில், விளாடிமிர் புடின் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
திங்களன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களிடமே ட்ரம்ப் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், இதுவரை போர் நிறுத்தம் வேண்டும் என பல முயற்சிகளை புடின் முன்னெடுத்துள்ளார் என வெளிப்படையாகக் கூறி வந்த ட்ரம்ப் தற்போது அமைதியை புடின் விரும்பவில்லை என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு மறுத்தால் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் ரஷ்யா மீது பாயும் என ஞாயிறன்று ஐரோப்பிய தலைவர்களிடம் வீர வசனம் பேசிய ட்ரம்ப், திங்களன்று ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தற்போதைய சூழலில் முறையல்ல என விளக்கமளித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசும் போது இது தாம் தொடங்கி வைத்த போரல்ல என குறிப்பிட்ட ட்ரம்ப், உக்ரைன் போர் விவகாரத்தில் தமது நிர்வாகம் உக்கிரமான முடிவெடுக்க தயாரல்ல என சுட்டிக்காட்டியதாகவே கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் வர்த்தக உறவு
ட்ரம்பின் இந்த திடீர் முடிவில் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். உக்ரைன் அல்லது ஐரோப்பா பணம் செலுத்தும் வரையில் உக்ரைனுக்கான ஆயுத ஏற்றுமதியை ட்ரம்ப் நிறுத்தப் போவதில்லை.
இது உக்ரைனுக்கு ஆதரவளிக்க உதவியாக இருக்கும். மேலும், வத்திக்கானில் முன்னெடுக்க வாய்ப்புள்ள அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யா-உக்ரைனுக்கான சிறப்பு தூதர் கீத் கெல்லாக் ஆகியோரை அனுப்பி வைக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் திங்களன்று இந்த விவகாரத்திலும் ட்ரம்ப் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுப்பதில் ஒத்துழைக்க மறுத்த டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தக உறவை முன்னெடுக்கவே ஆர்வம் காட்டுவதாக தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |