ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி
வடகொரியாவில் ஊடுருவி கிம் ஜோங் உன் செயற்பாடுகளை ரகசியமாக கண்காணிக்க டொனால்ட் ட்ரம்ப் அணுப்பிய சிறப்புப்படை, அப்பாவி மீனவர்களை படுகொலை செய்து திரும்பிய திகில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
SEAL அணி 6
கடந்த 2019ல், ட்ரம்ப் முதல் முறை ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் பின்னர், வடகொரியாவின் கிம் ஜோங் உன் உடனான வலராற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார்.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் Navy SEAL என்ற சிறப்புப்படை வடகொரியாவில் ஊடுருவும் ரகசிய திட்டத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.
வடகொரிய திட்டத்திற்காக SEAL அணி 6 தெரிவானது. இதே அணியினரே மே மாதம் 2011ல் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த ஒசாமா பின்லேடனை படுகொலை செய்தது.
ஆனால், வடகொரியாவுக்குள் ஊடுருவ பல மாதங்கள் தீவிர பயிற்சி, கிம் ஜோங் உன் மாளிகையில் ஒட்டுக்கேட்கும் கருவிகளை பொருத்துவது உள்ளிட்ட திட்டத்துடன் ஊடுருவிய SEAL அணியின் திட்டம் மீனவர்கள் படகு ஒன்றால் தலைகீழானது.
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், SEAL அணி வடகொரிய கடற்கரையில் நுழைந்ததும், அவர்களின் நடமாட்டத்தை மீனவர் படகு ஒன்று அடையாளம் கண்டுள்ளது.
குறித்த படகானது, வடகொரிய இராணுவத்தின் ரோந்து படகு என பயந்த SEAL அணி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். படகில் இருந்த மூவர் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சடலங்கள் கடலுக்கடியில் மூழ்கும் வகையில் அவர்களின் நுரையீரலை கத்தியால் சேதப்படுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள் என அடையாளம் கண்டதும், திட்டத்தை உடனடியாகக் கைவிட்டு SEAL அணி திரும்பியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் ரகசியமாக முன்னெடுத்த இந்த ஊடுருவல் திட்டம் ஃபெடரல் விதிகளை மீறும் செயல் என்பதால், நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, தொடர்புடைய சிறப்பு அமைப்புகளிடமும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மீனவர்கள் கொல்லப்பட்டதும்
அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கி ஒன்றில் வடகொரியாவிற்கு அனுப்பப்பட்ட SEAL அணி, சுமார் இரண்டு மணி நேரம் கடலில் நீந்தி வடகொரிய கடற்கரையில் நுழைந்துள்ளனர். ஒட்டுக்கேட்கும் கருவிகளை பொருத்திவிட்டு, அடையாளம் காணப்படும் முன்னர் உடனடியாக திரும்ப வேண்டும் என்பதே SEAL அணியினரின் திட்டம்.
ஆனால், எதிர்பாராத வகையில் மீனவர்கள் கொல்லப்பட்டதும் SEAL அணி உடனடியாக நீர்மூழ்கிக்கு திரும்பியுள்ளது. இதனிடையே, சம்பவம் நடந்த பகுதியில் திடீரென்று வடகொரிய இராணுவ நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அமெரிக்காவின் SEAL அணி ஊடுருவிய சம்பவம் கிம் தரப்பு கண்டுபிடித்தார்களா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இதன் பின்னர் பிப்ரவரி 2019ல் வியட்நாமில் கிம்முடன் ட்ரம்ப் ஒரு உச்சிமாநாட்டை நடத்தினார்.
அதன் பின்னர் ஜூன் மாதம் வட கொரியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டார். அத்துடன் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு அப்பால் காலடி எடுத்து வைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரையும் ட்ரம்ப் பதிவு செய்தார்.
இருப்பினும் ட்ரம்ப் - கிம் சந்திப்பால் எந்த ஒப்பந்தங்களும் முன்னெடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |