ஈரான் போருக்கு உதவாத நாடுகளைப் பழி வாங்க திட்டமிடும் ட்ரம்ப்: நேட்டோ அணிக்கு சிக்கல்
ஈரான் போருக்கு ஆதரவளிக்கத் தவறிய நேட்டோ அணி மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பழிவாங்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி நடவடிக்கை
உறுப்பு நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் ட்ரம்ப் பழிவாங்குவார் என தெரிய வந்துள்ளது. புதன்கிழமை நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்த பிறகு, ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் போர் தொடர்பில் அமெரிக்காவிற்கும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் விரிவடைந்து வரும் நிலையில் ட்ரம்பிடம் இருந்து இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ அணியில் இருந்து அமெரிக்கா விலக முடிவு செய்துள்ளதாக மிக சமீபத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், புதன்கிழமை இரவு, சமூக ஊடகப் பதிவு ஒன்றில் நேட்டோ மீது கடுமையாகச் சாடி, அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ உதவ முன்வரவில்லை; மீண்டும் நமக்குத் தேவைப்பட்டாலும், அவர்கள் உதவ முன்வரப்போவதில்லை என பதிவு செய்துள்ள ட்ரம்ப், கிரீன்லாந்தை நினைவிருக்கிறதா என மறைமுகமாக மிரட்டலும் விடுத்துள்ளார்.
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது சாத்தியமான உத்தியையே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்த் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ட்ரம்பிடம் வலியுறுத்திய நேட்டோ தலைவர்களில் ரூட்டேவும் ஒருவர்.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்கத் தனக்கு உதவ மறுத்த நேட்டோ நாடுகளின் மீது ஏற்பட்ட விரக்தியின் விளைவாக, அந்நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை ட்ரம்ப் திரும்பப் பெறக்கூடும் என அமெரிக்காவின் நிர்வாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
நேட்டோ உறுப்பு நாடுகளைப் பழிவாங்க ட்ரம்ப் பல்வேறு திட்டங்களைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் ராணுவத்தை வெளியேற்றும் திட்டத்திற்கே வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளிடமிருந்து அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
அவமதிப்பு உணர்வு
ஈரான் மீதான தாக்குதல்களைப் பகிரங்கமாக ஆதரித்த நேட்டோ உறுப்பு நாடுகளில் கனடா, செக் குடியரசு, அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் அடங்கும்.

பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ளன, ஆனால் சில நேட்டோ உறுப்பு நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.
நேட்டோ உறுப்பு நாடுகளான ஸ்பெயினும் பிரான்சும், அமெரிக்கா தங்களது வான்வெளி அல்லது கூட்டு இராணுவ வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ததால் அல்லது கட்டுப்படுத்தியதால் ட்ரம்ப் கோபமடைந்தார்.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தமக்கு உதவ வேண்டும் என ட்ரம்பின் தொடர்ச்சியான கோரிக்கை புறந்தள்ளப்பட்டது அவருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.

இருப்பினும், போர் முடிவுக்கு வந்தவுடன் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான அமெரிக்கா அல்லாத சர்வதேசக் கூட்டணிக்கு உதவ பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகள் ஒப்புக்கொண்டன.
கிரீன்லாந்து விவகாரத்தில் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் படைகளை நகர்த்திய நிலையில், நேட்டோ மீதான ட்ரம்பின் அவமதிப்பு உணர்வு குறிப்பாகத் தீவிரமடையத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |