வீடற்றவர்களை வெளியேற்றுவேன்: டிரம்பின் புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து வீடற்ற மக்களை வெளியேற்றப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் வீடற்றவர்களை வெளியேற்றும் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், வீடற்றவர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களை தலைநகர் வாஷிங்டனில் இருந்து வெளியேற்றப் போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தலைநகர் வாஷிங்டனில் இருந்து வீடற்றவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு நகரின் வெளியே தங்குவதற்கு இடம் வழங்கப்படும், அதே நேரம் குற்றவாளிகள் நகரை விட்டு வெளியேற தேவையில்லை, மாறாக அவர்களை சிறையில் அடைப்போம் என பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த புதிய திட்டம் குறித்த முழு விவரங்களும் இதுவரை கிடைக்கவில்லை, ஆனால் தேசிய காவல் படையினர் நூற்றுக்கணக்கானோர் வாஷிங்டனில் நிலைநிறுத்த அரசு தயாராகி வருவதாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்பின் இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இதில் காவல் படையினரின் செயல் திட்டங்கள் மற்றும் எண்ணிக்கை ஆகியவை தற்போது தீர்மானிக்கப்பட்டு வருவதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வீடற்றவர்களை வெளியேற்றுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் எந்த சட்ட அதிகாரத்தை பயன்படுத்துவார் என்பதும் தெரியவில்லை.
வீடற்றவர்களின் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 700000 பேர் வசிக்கும் தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் ஒவ்வொரு இரவும் சுமார் 3,782 பேர் வீடற்றவர்களாக வெளியே தங்குவதாக வாஷிங்டனின் வீடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க உதவும் சமூக அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
டிரம்பின் அறிவிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டனில் குற்ற வழக்குகள் அதிகரிப்பதற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என மாகாணத்தின் மேயர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |