மொத்தமாக கைவிடுவோம்... இஸ்ரேலை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைத்துக் கொண்டால், அமெரிக்காவின் மொத்த ஆதரவையும் இஸ்ரேல் இழக்கும் நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆதரவை இழக்கும்
இஸ்ரேலின் இந்த முடிவை ஏற்கனவே துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரும் எதிர்த்து, இஸ்ரேலை எச்சரித்தனர்.
இஸ்ரேலின் இந்த நகர்வு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை, அரபு நாடுகளுக்கு தாம் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் தற்போது அதை முன்னெடுக்க முடியாது. அரேபிய நிர்வாகத்தின் ஆதரவு இந்த விவகாரத்தில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பிடிவாதமாக இஸ்ரேல் அந்த முடிவுக்கு வரும் என்றால், கண்டிப்பாக அமெரிக்காவின் அனைத்து ஆதரவையும் இழக்கும் நிலை வரும் என்றார்.
மட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதிக்குள் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்கும் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் சவுதி அரேபியாவும் இணையும் என்று தாம் நம்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முட்டாள்தனமான அரசியல்
இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்த காஸா போர்நிறுத்தத்தை வலுப்படுத்த, சமீபத்திய நாட்களில் இஸ்ரேலுக்கு உயர் அதிகாரிகளை அவர் அனுப்பியுள்ளார்.
ஆனால், மூன்று நாட்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு வான்ஸ் நாடு திரும்பியதும் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு பயணப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே மேற்குக் கரையை இணைப்பதற்கு வழி வகுக்கும் இரண்டு மசோதாக்களை இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இஸ்ரேலின் இந்த திடீர் நகர்வை கடுமையாக விமர்சித்த வான்ஸ், இது மிகவும் முட்டாள்தனமான அரசியல் தந்திரம், தனிப்பட்ட முறையில் தம்மை இஸ்ரேல் நிர்வாகம் அவமானப்படுத்தியதாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |