நிலநடுக்கத்தினால் 35 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் எல்லை!
துருக்கி - அர்மேனியா எல்லை 35 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பூகம்ப பேரிடர்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 28,000-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், பேரிடர் பகுதிகளுக்கு சென்று துருக்கி ஜனாதிபதி ரீசெப் தயீப் எர்டோகன் பார்வையிட்டார்.
இந்த நிலையில் அண்டை நாடான அர்மேனியாவின் எல்லைக் கடவு, மனிதாபிமான உதவிகளை கடக்க திறக்கப்பட்டுள்ளதாக துருக்கிய தூதர் செர்டார் கிலிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 1988ஆம் ஆண்டு அர்மேனியாவில் சுமார் 30,000 பேர் நிலநடுக்கத்தில் பலியாகினர். அப்போது அர்மேனியாவுக்கு துருக்கி உதவிட எல்லைக் கடவு திறக்கப்பட்டது.
35 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் எல்லை
அதன் பின்னர் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக துருக்கிக்கு உதவ தற்போது எல்லைக் கடவு திறக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது.
@RubenRubinyan (Twitter)
துருக்கிக்கு உதவி செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி என்று அர்மேனியாவின் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் ரூபன் ரூபினியன் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில் அலிகன் கிராசிங்கில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட உதவிகளுடன் ஐந்து டிரக்குகள் துருக்கிக்கு வந்ததாகவும் செர்டார் கிலிக் கூறியுள்ளார்.
AFP
துருக்கி - அர்மேனியா ஆகிய இரு நாடுகளும் முறையான ராஜதந்திர உறவுகளை ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் 1990களில் இருந்து அவற்றின் பகிரப்பட்ட எல்லை மூடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் இரு நாடுகளும் உறவுகளை சீராக்க உதவுவதற்காக தூதர்களை நியமித்தன என்பது குறிப்பிடத்தக்கது.