இடிபாடுகளில் புதைந்த தாயும் 2 குழந்தைகளும் 11 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 228 மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
41,000-ஐ கடந்த உயிரிழப்புகள்
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது.
துருக்கியில் 36,187 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் 5,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சிரிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளன.
ஆயினும்கூட, மீட்பவர்கள் இடிபாடுகளில் இன்னும் உயிருடன் தப்பிப்பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
AFP
தாயும், 2 குழந்தைகளும்
அந்த வகையில், முதல் பூகம்பம் ஏற்பட்டு 228 மணி நேரத்திற்குப் பிறகு, துருக்கியின் அன்டாக்யாவில் ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாயும் இரண்டு குழந்தைகளும் இடிபாடுகளுக்கு அடியில் கிட்டத்தட்ட 11 நாட்கள் கழித்த போதிலும் நல்ல நிலையில் இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் எலா (Ela) என்றும் அவரது இரண்டு குழந்தைகளின் மெய்சம் மற்றும் அலி (Meysam and Ali ) என்றும் அரசுக்கு சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலா மற்றும் அவரது மகன் மற்றும் மகளுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர், மூவரும் நீரிழப்புடன் இருப்பதாகவும் ஆனால் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக புதன்கிழமை, நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் நகரில் 74 வயது பெண் மற்றும் 46 வயது பெண் மீட்கப்பட்டனர்.