பாகிஸ்தானை ஆதரித்ததற்காக பெரும் இழப்பை எதிர்கொண்டுவரும் நாடு
பாகிஸ்தானை ஆதரித்ததற்காக துருக்கி மிகப்பாரிய விலையை கொடுத்துவருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததன் விளைவாக, துருக்கிக்கு பயணிக்கும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஜூன் 2025-ல் 37% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக துருக்கி வெளியிட்ட உத்தியோகபூர்வ சுற்றுலா தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 38,307 இந்தியர்கள் துருக்கிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 24,250-ஆகவே குறைந்துவிட்டது. இதேபோல், மே மாதத்தில் 41,554 சுற்றுலாப்பயணிகளில் இருந்து 31,659-ஆக குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி, பாகிஸ்தான் இந்தியா மீது நடத்திய தாக்குதல்களில் துருக்கி தயாரித்த SONGAR ASISGUARD ஆயுத ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்டது. இந்த தகவல் இந்திய மக்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, MakeMyTrip, EaseMyTrip மற்றும் Cleartrip போன்ற பிரபல இந்திய சுற்றுலா தளங்கள் துருக்கிக்கு செல்வதற்கான பயண தொகுப்புகளை விற்பனை செய்ய மறுத்தன.
மேலும், துருக்கி இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் யாசர் காதியோக்ளு உள்ளிட்ட குழுவினர், ஏப்ரல் 30-ஆம் திகதி பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தை சந்தித்ததையும் இந்திய அரசு சந்தேகமாகக் கொண்டுள்ளது.
துருக்கி, சீனா மற்றும் அஜர்பைஜான் ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மற்றும் OIC மன்றங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உரையாற்றியது.
இந்தியா எதிர்வினையாக, பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸை விஜயம் செய்து துருக்கியின் செயலை மறைமுகமான முறையில் எதிர்த்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |