திமுகவின் சீக்ரெட் ஓனர் மோடி ஜி - பொதுக்குழுவில் விஜய் ஆவேச பேச்சு
2026 தேர்தலில் திமுக தவெக இடையே மட்டும் போட்டி என தவெக பொதுக்குழுவில் விஜய் பேசியுள்ளார்.
தவெக பொதுக்குழு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
இறுதியாக தமிழக வெற்றிக்கழக தலைவர்விஜய், மத்திய பாஜக அரசையும், மாநில திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
மன்னராட்சி முதல்வர்
இதில் பேசிய அவர், “கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு?அரசியல் என்றால் என்ன.. ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா?
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே, செயலில் அதை காட்ட வேண்டும் அவர்களே.
ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி தலைவராக கழக தோழர்களையும், நாட்டு மக்களையோ சந்திக்க தடைபோட நீங்கள் யார்? தடையை மீறி மக்களை பார்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் நான் போயே தீருவேன்.
சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே ஒரு காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக கனவு காண்கிறார்கள் என பேசுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்றும் சொல்கிறீர்கள்.
பிறகு ஏன் எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள்.
அணை போட்டு ஆற்றை வேண்டுமானல் தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமான காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாகக் கூட மாறும்.
திமுகவின் சீக்ரெட் ஓனர் மோடி ஜி
முதல்வர் அவர்களே.. உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும்.
பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை வேற அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்.
தினம் தினம் கொடுமைகளை சந்திக்கின்ற தமிழ்நாட்டு பெண்கள், உங்களின் அரசியலுக்கு ஆட்சிக்கு அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட போகிறார்கள்.
இங்கு நீங்கள் தான் இப்படி என்றால் உங்கள் சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்கள் அதுக்கும் மேல. உங்கள் பெயரை சொல்வதற்கு எனக்கு பயமா? மத்தியில் ஆளுகிறவர், மாநிலத்தில் ஆளுகிறவர் என்று சொல்கிறோம். இதை கூட புரிந்துகொள்ள மாட்டீர்களா?
மத்தியில் பாஜக தானே ஆள்கிறது. காங்கிரஸா? மாநிலத்தில் திமுக தானே ஆள்கிறது அதிமுகவா?
தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?
மோடி ஜி.? தமிழர்கள் தமிழ்நாடுன்னா ஏன் ஜி உங்களுக்கு அலர்ஜி? GST தொகையை வாங்கிக்கிறீங்க. ஆனால் பட்ஜெட்டில் தொகையை ஒதுக்க மாட்டேங்குறீங்க.
தமிழ்நாட்டை பார்த்து கேண்டில் பண்ணுங்க சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார். பார்த்து பண்ணுங்க சார்.
மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என கொண்டு வந்த போதே உங்கள் திட்டம் என்ன என தெரிந்து விட்டது மோடி சார், நீங்கள் நாட்டை எந்த வழியில் மாற்ற நினைக்கிறீர்கள் என்று. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்.
2026 தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமையும். தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். தொழிலாளர்கள் பக்கம் நிற்போம். எங்கள் அரசியலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
இதுவரை தமிழ்நாடு சந்திக்காத வித்தியாசமான தேர்தலை 2026ல் சந்திக்கும். இரண்டே கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. ஒன்னு TVK. இன்னொன்னு DMK" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |