சர்ச்சையை ஏற்படுத்திய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இருவர் புகார்! அறிவுரையின்படி சிகிச்சை எடுத்ததால் பாதிப்பு
தமிழகத்தில் தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கி சர்ச்சையில் சிக்கிய, சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இருவர் புகார் அளித்துள்ளனர்.
தவறான மருத்துவ ஆலோசனை
சமீபத்தில் யூடியூப் வலைதளத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ ஆலோசனைகள் குறித்த வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அவரது நேர்காணல்களில் குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என கூறப்பட்ட விடயங்கள் பெரும் விவாதங்களை உண்டாக்கியது.
ஷர்மிகாவுக்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன்வந்து அவர் மீது விசாரணை நடத்தியது.
பக்க விளைவுகள் ஏற்பட்டதாக புகார்
இந்த நிலையில் ஷர்மிகாவின் மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து சிகிச்சை எடுத்ததால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக, இருவர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்த மருத்துவர் ஷர்மிகா அளித்த குறிப்புகள் பயன் அளிக்கவில்லை; பக்க விளைவுகள் ஏற்பட்டன என்ற அடிப்படையில் இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என தெரிவித்துள்ளனர்.