கொரோனாவுக்கு மத்தியில் கட்டுப்பாடற்ற சுற்றுலா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாடுகள்!
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமானது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் திங்கள்கிழமை அறிவித்தனர்.
தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ள சுற்றுலாப் பயணிகளை இரு நாடுகளுக்கு இடையில் எந்த வரம்புகளும் இல்லாமல், சுய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயணிக்க இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பெரும்பாலான பொருளாதாரம் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் நிலையில், கடந்த 11 மாதங்களாக பெருந்தொற்று காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்நிலையில், இரு நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த புதிய சுற்றுலா ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடுமையான புதிய பயணக் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.