ஆசிய நாடொன்றை மொத்தமாக உருக்குலைத்த புயல்... 50 கடந்த இறப்பு எண்ணிக்கை
ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் மிக சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 52 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பகுதி வெள்ளத்தில்
இந்த ஆண்டில் மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று இதுவெனவும் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக லட்சக்கணக்கானோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய தீவான செபுவில் உள்ள முழு நகரங்கள் உட்பட Kalmaegi புயல் காரணமாக பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
செபு தீவிலேயே அதிகமானோர் மரணமடைந்துள்ளதாகவும், 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால மக்கள் கூரை மீது தஞ்சமடைந்தனர்.
பெருவெள்ளத்தில் சிக்கி கார்களும் கப்பல் கொள்கலன்களும் தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனிடையே, செபுவின் தெற்கே உள்ள மின்டானாவ் தீவில் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆறு உடல்கள் மீட்கப்பட்டதாக ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார், அவை விமானி மற்றும் பணியாளர்களுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
செபுவில் பேரிடர் நிலை
உள்ளூரில் டினோ என்று அழைக்கப்படும் இந்தப் புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்ததிலிருந்து பலவீனமடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து மணிக்கு 80 மைல் வேகத்திற்கு மேல் காற்று வீசி வருகிறது.

மேலும், புதன்கிழமைக்குள் விசயாஸ் தீவுகள் பகுதியைக் கடந்து தென் சீனக் கடல் வழியாக வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர் நிவாரணப் பணிகளை எளிதாக்குவதற்காக, மாகாண ஆளுநர் பமீலா பாரிகுவாட்ரோ செவ்வாய்க்கிழமை மாலை செபுவில் பேரிடர் நிலையை அறிவித்தார்.

வெளியான தகவல்களில், பெரும்பாலான இறப்புகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேற்று நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது.
பிலிப்பைன்ஸ் நாடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |