பாகிஸ்தானிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ஐக்கிய அரபு அமீரகம்; அதிர்ச்சியில் இம்ரான் கான் அரசு!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பாகிஸ்தானிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திரும்பக் கோரியுள்ள நிலையில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானில் டெபாசிட் செய்யப்பட்ட இந்த தொகை இப்போது அதன் முதிர்ச்சியை எட்டியுள்ளது.
இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருப்பித் தரும் காலக்கெடு 20201 மார்ச் 12 ஆகும். இந்த கடனை திருப்பி கொடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி பாக்கிஸ்தானிய உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தை, குறிப்பாக கிரவுன் பிரின்ஸை அணுக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அவற்றுக்கு எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையைத் திருப்பித் தருவது இப்போது அதன் பொருளாதார நிலைமையை பாதிக்கும் என்று பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கெஞ்சியுள்ளது.
கடனில் சிக்கியுள்ள பொருளாதாரம் மற்றும் COVID-19 தொற்றுநோயின் தாக்கம் இந்த தாமதத்திற்கு ஒரு காரணம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, கடுமையான தொற்றுநோய்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 1.9 சதவீதத்திலிருந்து, -1.5 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கான் அரசாங்கம் நடப்பு ஆண்டில் மட்டும் வெளிநாடுகளிடமிருந்து மொத்தம் 6.7 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த நிலையில், 1 பில்லியன் டொலர் கடன் தொகையினை ஐக்கிய அரபு அமீரகம் திருப்பி கேட்டுள்ளதால் பாகிஸ்தான் திக்குமுக்காடி நிற்கிறது.