FlyDubai விமானத்தை தரையில் மோத முயன்ற விவகாரம்: மௌனம் கலைத்த அமீரகம்
UAE Breaks the Silence: விமானி ஒருவர் Flydubai விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் தொடர்பில் அமீரகம் மௌனம் கலைத்துள்ளது.
விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
திடீரென விமானியை தாக்கிய சக விமானி
சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானியான ஸ்மித்தை (Captain Smit Machchhar), அவரது சக விமானி ஒருவர் திடீரென தாக்கத் துவங்கியுள்ளார்.

அதாவது, அவர் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோதவைக்க முயல, அதைப் புரிந்துகொண்ட ஸ்மித், அவரைத் தடுக்க முயன்றுள்ளார்.
உடனே, அவசர காலத்தில் கதவு முதலானவற்றை திறப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடரி ஒன்றினால் ஸ்மித்தை சரமாரியாக தாக்கியுள்ளார் அந்த விமானி.
ஸ்மித் படுகாயமடைந்த நிலையிலும், இரத்தம் சொட்டச் சொட்ட விமானிகள் அறையின் கதவைத் திறக்க, சில பயணிகள் உதவிக்கு விரைந்துள்ளார்கள்.
அவர்கள் விமானியின் அறைக்குள் நுழைந்து, விமானத்தைத் தரையில் மோத முயன்ற விமானியைப் பிடித்துக் கட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
மௌனம் கலைத்த அமீரகம்
ஸ்மித்தைத் தாக்கிய விமானி குறித்து, அவர் ஓமான் நாட்டவர் என்பது தவிர, வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
அத்துடன், அந்த விமானம் துபாய் அரசுக்கு சொந்தமான விமானமாக இருந்தும், பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அமீரகம் எந்த கருத்தும் தெரிவிக்காமலே இருந்துவந்தது.
இந்நிலையில், அமீரக தரப்பு முதன்முறையாக தற்போது மௌனம் கலைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் ஆலோசகரான Anwar Gargash, இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்த விமானத்தின் விமானியும், இந்தியருமான ஸ்மித்தை பாராட்டியும் உள்ளார் அவர்.
ஒரு கடுமையான பயங்கரவாதச் செயலை எதிர்கொண்டதற்கும், ஒரு பேரழிவு ஏர்பட இருந்த நிலையில், அதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டதற்கும், ஸ்மித் பாராட்டுக்குரியவர் என்று கூறியுள்ளார் அவர்.
அத்துடன், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம் என்றும் கூறியுள்ள அவர், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அந்த விமானம் தங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட, தங்கள் கொடியைக் கொண்ட விமானம் என்பதால், விமானம் கடத்தப்பட்டு மோதவைக்கப்பட இருந்த அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படும் என அமீரக வெளிவிவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.