ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைந்த ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய ராணுவம்! உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா
ஐக்கிய அமீரகம் மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, சுதாரித்துக்கொண்ட இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடுகளின் வணிக மற்றும் சுற்றுலா மையமாக விளங்கும் ஐக்கிய அமீரகத்திற்கு கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் பிரதமர் வருகை தந்ததை தொடர்ந்து, சில ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இதனை ஏமன் மற்றும் ஈரானுடன் இணைந்த கூட்டுப்படைகளை சேர்ந்த ஹௌதிஸ் படையினர் பொறுப்பேற்றுயுள்ளனர். மேலும் ஜனவரியில் 17 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் உட்பட மொத்தம் நடந்த 3 தாக்குதல்களுக்கு இந்த ஹௌதிஸ் படையினர் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வளைகுடா நாடுகளுக்கு சொந்தமான ஆளில்லா பகுதிகளில் நுழைந்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து, சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுக்களும் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலை True Promise Brigades என்ற ஒரு சிறிய பயங்கரவாத குழு செய்து இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த SITE புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து எந்த ஒரு தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக இருப்பதாகவும், பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய அமீரகத்தின் பாதுகாப்பு உதவிக்காக, அமெரிக்கா தனது போர் விமானங்களை வியாழக்கிழமை அனுப்பிவைப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.