ஐக்கிய அமீரக மக்களுக்கு இந்திய பிரதமரிடம் இருந்து வந்த WhatsApp கடிதம்: கவலையில் பலர்
ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் இந்தியர்கள் உட்பட பல நாட்டவர்களுக்கு திடீரென்று இந்திய பிரதமரிடம் இருந்து வந்த WhatsApp கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் அரேபிய மக்களுக்கும்
ஐக்கிய அமீரகத்தில் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் அரேபிய மக்களுக்கும் பிரித்தானியா, பாகிஸ்தான் நாட்டவர்களுக்கும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால சாதனை விளக்க கடிதம் சென்றுள்ளது.
தொடர்புடைய பதிவுக்கு பதிலும், ஆலோசனைகளும் கோரப்பட்டிருந்தது. இந்தியாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் முந்தைய நாளில் தொடர்புடைய கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது.
மோடி ஆதரவாளர்கள் பலருக்கு அது ஆனந்த அதிர்ச்சியாக மாற, இந்தியரல்லாத பலர் மண்டை குழம்பிப் போயுள்ளனர். துபாயில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் Asma Zain என்பவருக்கும் குறித்த கடிதம் சென்றுள்ளது.
தனிப்பட்ட அலைபேசி இலக்கங்கள்
என்னிடம் இருந்து எத்தகைய கருத்தை பிரதமர் மோடி எதிர்பார்க்கிறார் என அவரும் குழம்பிப்போயுள்ளார். மேலும், சமீபத்தில் வேலை நிமித்தம் இந்தியாவுக்கு பயணப்பட்ட துபாயில் வசிக்கும் பிரித்தானியர் ஒருவருக்கும் மோடியின் சாதனை விளக்க கடிதம் வந்துள்ளது.
பல எண்ணிக்கையிலான அரேபிய மக்களும் குறித்த கடித்தம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியால் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்தியாவில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
ஐக்கிய அமீரக மக்களில் பலர் தங்கள் தனிப்பட்ட தரவுகளில் இந்திய அரசாங்கம் அத்துமீறியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். அதில், நமது தனிப்பட்ட அலைபேசி இலக்கங்கள் மோடி அரசாங்கத்திற்கு அல்லது அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எப்படி கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.