பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உபர்(Uber) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பெண்கள்
கலிபோர்னியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி 23 வயது இளம் பெண்ணான எமிலி நார்மின்-பார்கர்(Emily Normandin-Parker) மற்றும் அவரது 2 தோழிகள் வீடு திரும்புவதற்காக உபர் செயலியை பயன்படுத்தி டாக்ஸியை புக் செய்துள்ளனர்.
இந்த பயணத்தின் போது எமிலியின் தோழி உடல்நலக்குறைவு காரணமாக காரில் வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரான வூ ட்ரான்(Vu Tran) என்பவர் காரை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, போதையில்(intoxicated) இருந்த அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.

அவர்கள் இறக்கிவிடப்பட்ட சிறிது நேரத்தில், அவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் மோதி எமிலி பரிதாபமாக உயிரிழந்தார்.
40 மில்லியன் டொலர் இழப்பீடு
இந்த சம்பவம் தொடர்பாக எமிலியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், எமிலி உபர் நிறுவனம் கூறிய அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவளை உபர் நிறுவனம் பாதுகாப்பாக வீடு சேர்ப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக உபர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு காரை சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை கோரியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த எமிலியின் குடும்பத்தினருக்கு உபர் நிறுவனம் 40 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.