கருணாநிதி பேரன் TO தமிழக துணை முதலமைச்சர்! உதயநிதி ஸ்டாலின் கடந்த வந்த பாதை
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தமிழகத்தின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
நவம்பர் 27 -ம் திகதி தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள உதயநிதி ஸ்டாலின் சினிமா மற்றும் அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தயாரிப்பாளர் முதல் நடிகர் வரை
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 1977-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் திகதி பிறந்தார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை டான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், லயோலா கல்லூரியில் சேர்ந்து வணிகவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.
அங்கு, தனது மனைவி கிருத்திகாவை சந்தித்து காதல் திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு, இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.
பின்னர், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளரானார். தனது தயாரிப்பில் விஜய்யின் ‘குருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இதையடுத்து, ஆதவன், மன்மதன் அம்பு ஆகிய படங்களை தயாரித்தார். அப்போது அவர் மீது பெரும் விமர்சனம் எழுந்தது. ஆனால், விநியோகஸ்தராக களமிறங்க முடிவு செய்து 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ரேடான் மீடியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
விநியோகஸ்தராக தன் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட இவர், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் விநியோக உரிமையை பெற்று வெற்றி கண்டார்.
பின்னர், நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் தொடங்கி 'மாமன்னன்' படம் வரை நடிகராக தனது பயணத்தை தொடர்ந்தார். இதையடுத்து, அவரது அரசியல் பயணம் வேகமெடுக்க தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபை கூட்டங்களை, பல்வேறு மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் திறம்பட கையாண்டார்.
பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டன.
அவரது இயல்பான பேச்சுக்கள், வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றியை கண்டதற்கு இவரது பிச்சாராமும் முக்கியமானது ஆகும்.
இளைஞர் அணி பொறுப்பு
இதையடுத்து, 2019 -ம் ஆண்டில் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். அப்போது, ஆட்சி அதிகாரத்தில் திமுக இல்லாத போதும் மக்கள் பணிகளை செய்வதற்கு உதயநிதி உத்தரவிட்டார்.
பின்னர், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
நீட் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அணியுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள நூலகத்திற்கு தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களை வழங்கினார்.
மேலும், நூலகத்தின் மேம்பாட்டிற்காக நிதியையும் வழங்கினார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களை சந்தித்து வந்தார். ஏ.கே ராஜன் ஆணையத்தில் நீட்டிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை பதிவு செய்தார். தற்போது வரை நீட் தேர்வுக்கு எதிரான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல, நாடாளுமன்றத்தில் பாஜக அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்.
இந்த சட்டத்திற்கு ஆதரவை தெரிவித்த அதிமுவை கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கி போராடினார்.
அதோடு, TNPSC முறைகேட்டைக் கண்டித்து, மாணவர் அணியுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஊரடங்கு பணி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்களை அறிவித்தார்.
இவர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்தனர்.
அதாவது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திமுக இளைஞர் அணியின் சார்பாக உதவிகள் கிடைத்தது.
அண்ணா பல்கலைக் கழகம் & இந்தி எதிர்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மத்திய அரசு எடுத்த முடிவை அன்றைய துணை வேந்தர் சூரப்பா ஆதரித்தார். அதேபோல, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவும் ஆமோதித்தது.
இதையடுத்து, இந்த முடிவை கைவிட வேண்டும் என்று மாணவர் அணியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
முக்கியமாக, அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இவர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதன்முடிவில், பாஜக மற்றும் அதிமுக அரசு முடிவை திரும்ப பெற்றன.
அதேபோல, இந்தித் திணிப்பு, ஒரே தேர்வு என மொழி உள்ளிட்டவற்றை கண்டித்தும், பாஜகவை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
25 லட்சம் உறுப்பினர்கள்
இதையடுத்து, சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்க்கும் பணிகளை முன்னெடுத்தார்.
அவர்களில் சிறப்பாக பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை ஒன்றிய கிளைகளிலும், பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகளாகவும் நியமனம் செய்தார்.
இந்த வேலைகள் எல்லாம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்ததால் தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கு உதவியாக இருந்தது.
செங்கல் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலில் இவரது பிரச்சாரங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஒற்றை செங்கலை கையில் வைத்து இவர் நடத்திய பிரச்சாரங்கள் வைரலாகின. அதிமுக மற்றும் பாஜகவை எதிர்த்து இவர் பேசிய கருத்துக்கள் மக்கள் மொழியில் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர், கொரோனா காலத்தில் தனது தொகுதி மக்களுக்கு அரிசி-மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தனது செலவில் வழங்கினார். மேலும், தொகுதியில் உள்ள மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை ஒருங்கிணைத்தார்.
தொகுதி பணிகள்
தனது தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் எனக் கடந்த கல்வியாண்டில் மட்டும் ரூ.1 கோடியை கல்வி உதவித்தொகையாக வழங்கினார்.
திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்கினார். நீண்ட நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கினார். இதனால், தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
மேலும், தொகுதியில் உள்ள பள்ளி-கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் இலவச இணைய வசதி ஏற்பாட்டை செய்தார்.
மேலும், தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். இதனால், மக்களின் பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைத்தது.
மெரினா கடற்கரையில் நடைபாதை
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலை ரசிக்க வேண்டும் என்பதற்காக தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்த பாதையாக மாற்ற வேண்டும் என்று தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபாதை அமைக்க உத்தரவிட்டார்.
அதேபோல, அடையாறு – கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயானது இவரது தொகுதியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இதனால்,இருபுறங்களும் கால்வாய் மாசடைந்து ஓடுவதால் அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.
மேலும், ‘செஸ் ஒலிம்பியாட்’ குழுவில் இடம்பெற்று பல பணிகளை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றார். கட்சி பணிகளில் ஒரு பகுதியாக ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை' -யை தொகுதிவாரியாக நடத்தி முடித்தார்.
கட்சியில் உள்ள முன்னோடிகளை கவுரவப்படுத்தும் விதமாக எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி காட்டினார்.
வீடு வீடாக சென்று இளைஞர்களை சேர்க்கும் பணியான 'இல்லந்தோறும் இளைஞர் அணி' என்பதை முன்னெடுத்து திறம்பட செய்தார். இவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் மீண்டும் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் பொறுப்பு
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு வழங்கப்படவில்லை.
பின்னர், திமுக கட்சியினரும், மூத்த அமைச்சர்களும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
பின்னர், 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டதால் அமைச்சரானார்.
தான் அமைச்சரான பிறகு தமிழக அரசின் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார். தனது துறையான விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல்வேறு போட்டிகளை நடத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.
இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் என தொடர்ந்து செயல்படுத்தி தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |