ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி.., நேரில் நன்றி தெரிவித்த உதயநிதி
ரூ.7 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் தானம்
தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆயி என்கிற பூரணம். இவர் அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தனர்.
இவருக்கு கொடிக்குளம் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி ஆகும். இவர் இந்த நிலத்தை தனது கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தானமாக வழங்கியுள்ளார்.
மறைந்த மகள் ஜனனியின் நினைவாக நிலத்தை பள்ளிக்கு தானமாக பூரணம் வழங்கியுள்ளார். அதற்காக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இச்செய்தியறிந்து தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு குடியரசு தின விழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நன்றி தெரிவித்த உதயநிதி
இந்நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்திருந்த போது பூரணம் அம்மாளை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம்.
அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |