பேஷன் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய பிரித்தானிய தொழிலதிபர்: 17 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
பிரித்தானியாவின் பிரபலமான பேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் குவென்டின் கிரிஃபித்ஸ் தாய்லாந்தில் மர்மமான 17 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வது மாடியில் இருந்து விழுந்த குவென்டின்
பிரித்தானியாவின் பிரபலமான பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்களின் நிறுவனமான ASOS-யின் இணை நிறுவனரான 58 வயது குவென்டின் கிரிஃபித்ஸ் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது அடுக்குமாடி குடியிருப்பின் 17 வது மாடியில் இருந்து விழுந்து குவென்டின் கிரிஃபித்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது சதியா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பிரேத பரிசோதனைக்கு பிறகே குவென்டின் கிரிஃபித்ஸின் உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவென்டின் கிரிஃபித்ஸ், தன்னுடைய முதல் மனைவியை பிரிந்த பிறகு கடந்த 2007ம் ஆண்டு தாய்லாந்தில் குடியேறினார்.
பின்னர் தாய்லாந்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது அவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கிரிஃபித்ஸுக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உச்சம் தொட்ட ASOS நிறுவனம்

ASOS நிறுவனம் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னணி பேஷன் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
தற்போது பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்த ASOS நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |