கேரளாவில் சிக்கியது போன்ற பிரித்தானிய F-35B போர் விமானம் ஜப்பானில் அவசரமாக தரையிறக்கம்
பிரித்தானிய விமானப்படையின் F-35B போர் விமானம் ஒன்று ஜப்பானின் ககோஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
விமான சேவைகளில் தாமதம்
நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் பின்னர், அந்த விமானமானது ககோஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தால், சுமார் 20 நிமிடங்கள் ஓடுதளம் மூடப்பட்டுள்ளது. இதனால் சில விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய விமானப்படையின் F-35B போர் விமானம் ஒன்று நடுவானில் கோளாறை எதிர்கொள்வது சமீபத்திய நாட்களில் இது இரண்டாவது சம்பவம் என்றே கூறப்படுகிறது.
ஜூன் 14 ஆம் திகதி, பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு F-35B போர் விமானம், ஹைட்ராலிக் செயலிழப்பை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது.
இந்திய கடற்படையுடன்
ஆனால் 5 வாரங்களுக்கு பின்னரே அந்த விமானமானது பிரித்தானியாவிற்கு திரும்பச் சென்றது. 5வது தலைமுறை ஸ்டெல்த் வகை போர் விமானம், பிரித்தானியாவின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாகும்.
HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலானது தற்போது இந்தோ-பசிபிக் பகுதியில் செயல்பட்டு வருகிறது, சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கூட்டு கடல்சார் பயிற்சிகளையும் முடித்துள்ளது. இதனிடையே, ககோஷிமா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் புறப்பட்டதா இல்லையா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |